குடியரசு தினம்: திருச்சி விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு

நாடு முழுவதும் பாதுகாப்பை பலப்படுத்த மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
திருச்சி,
குடியரசு தின விழா வருகிற 26-ந் தேதி கொண்டாடப்பட உள்ளது. இந்த நிலையில் குடியரசு தின விழாவில் பயங்கரவாதிகள் நாசவேலையில் ஈடுபட வாய்ப்பு உள்ளதாக உளவுப்பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளதாக தெரிகிறது. எனவே குடியரசு தின விழாவையொட்டி நாடு முழுவதும் பாதுகாப்பை பலப்படுத்த மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
ஒவ்வொரு மாநில அரசுக்கும் உள்துறை அமைச்சகம் சார்பில் பாதுகாப்பில் கவனம் செலுத்த வேண்டும் என்று கடிதம் அனுப்பி அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டு உள்ளன. அதன்படி திருச்சி விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. முதல் கட்டமாக திருச்சி விமான நிலையத்தின் நுழைவு வாயிலில் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் நின்று விமான நிலையத்திற்கு வரும் வாகனங்களை சோதனை செய்து அனுப்பி வைக்கிறார்கள்.
2-வது கட்டமாக விமான நிலைய வாகன நிறுத்தம் பகுதியில் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் சோதனையில் ஈடுப்பட்டு வருகிறார்கள். 3-வது கட்டமாக விமான நிலையத்தில் முனைய நுழைவு வாயிலில் மோப்பநாய் உதவியுடன் பயணிகள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். 4-வது கட்டமாக பயணிகளின் உடைமைகள் ஸ்கேனர் கருவி மூலம் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருகிறது.
5-வது கட்டமாக பயணிகள் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்பட்டு விமானநிலைய முனையத்துக்குள் அனுமதிக்கப்படுகின்றனர். மேலும் விமான நிலையத்தில் முனைய பகுதியில் முன்னறிவிப்பு இன்றி நிறுத்தப்படும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. முக்கிய பிரமுகர்கள் வருகை தரும் பகுதியிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த 5 அடுக்கு பாதுகாப்பு வருகிற 30-ந்தேதி வரை நீடிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. குடியரசு தினத்தன்று விமானநிலையத்தில் விமான நிலைய இயக்குனர் ராஜு தேசியக்கொடி ஏற்றி வைக்கிறார். தொடர்ந்து பல்வேறு கலைநிகழ்ச்சிகளும், மோப்பநாயின் சாகச நிகழ்ச்சிகளும் நடக்கிறது.






