குடியரசு தின அலங்கார ஊர்திகள் மெரினாவில் மேலும் ஒரு வாரம் காட்சிப்படுத்தப்படும் - முதல்-அமைச்சர் அறிவிப்பு

சென்னை மெரினாவில் குடியரசு தின அலங்கார அணிவகுப்பு ஊர்திகள் மேலும் ஒரு வாரம் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்படும் என முதல்-அமைச்சர் அறிவித்துள்ளார்.
குடியரசு தின அலங்கார ஊர்திகள் மெரினாவில் மேலும் ஒரு வாரம் காட்சிப்படுத்தப்படும் - முதல்-அமைச்சர் அறிவிப்பு
Published on

சென்னை,

டெல்லியில் இந்த ஆண்டு குடியரசு தின அணிவகுப்பில் பங்கேற்பதற்காக தமிழக அரசு சார்பில் அலங்கார ஊர்திகள் அனுப்பி வைக்கப்பட்டன. ஆனால் மத்திய அரசு அதிகாரிகள் தமிழக அரசின் அலங்கார ஊர்தியை நிராகரித்தனர். இதனை தொடர்ந்து தமிழகத்தில் நடைபெற்ற குடியரசு தின விழா அணிவகுப்பில் அந்த அலங்கார ஊர்திகள் காட்சிப்படுத்தப்பட்டன.

இந்த அலங்கார ஊர்தியில் சுதந்திர போராட்ட வீரர்கள் மருது சகோதரர்கள், வேலுநாச்சியார், குயிலி, வீரபாண்டிய கட்டபொம்மன், கர்னகிரி வீரன் சுந்தரலிங்கம், ஒண்டிவீரன், பூலித்தேவன், அழகு முத்துக்கோன், மருது சகோதரர்கள் உருவாக்கிய காளையார்கோவில் கோபுரம் ஆகியவை வடிவமைக்கப்பட்டிருந்தன.

அதே போல் பெரியார், ராஜாஜி, பசும்பொன் முத்துராமலிங்க தேவர், காமராஜர், இரட்டைமலை சீனிவாசன், வாஞ்சிநாதன், தீரன் சின்னமலை, பொல்லான், திருப்பூர் குமரன், திருச்சி வ.வே.சாமிநாத அய்யர், காயிதே மில்லத், தஞ்சை ஜோசப் கொர்னேலியஸ் செல்லத்துரை குமரப்பா, கக்கன், கடலூர் அஞ்சலையம்மாள் ஆகியோரின் உருவ சிலைகள் இடம்பெற்றிருந்தன.

மற்றொரு அலங்கார ஊர்தியில் பாரதியார், வ.உ.சி., சுப்பிரமணிய சிவா, சேலம் விஜயராகவாச்சாரி உள்ளிட்ட சுதந்திர போராட்ட தியாகிகளின் உருவ சிலைகள் இடம்பெற்ற அலங்கார ஊர்தி என மொத்தம் 3 அலங்கார ஊர்திகள் தமிழக அரசின் குடியரசு தின விழாவில் அணிவகுத்தன.

மேலும் குடியரசு தினத்துக்கு பின்னர் 3 அலங்கார ஊர்திகளும் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களுக்கும் பொது மக்கள் பார்வைக்காக அனுப்பி வைக்கப்படும் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அதன்படி அனைத்து மாவட்டங்களிலும் உள்ள முக்கிய சந்திப்புகளில் இந்த அலங்கார ஊர்திகள் காட்சிப்படுத்தப்பட்டன. இந்த 3 அலங்கார ஊர்திகளும் ஒவ்வொரு மாவட்டத்துக்கும் சென்றபோது அங்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

இறுதியாக சென்னை மெரினா கடற்கரையில் இந்த அலங்கார ஊர்திகளை பொது மக்கள் பார்வையிடுவதற்காக 23 ஆம் தேதி(இன்று) வரை நிறுத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி மெரினா கடற்கரை விவேகானந்தர் இல்லம் எதிரேயுள்ள மணற்பரப்பில் இந்த ஊர்திகள் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில் மெரினாவில் நிறுத்தப்பட்டுள்ள அலங்கார ஊர்திகள் பொதுமக்கள் பார்வைக்கு மேலும் ஒரு வாரம் காட்சிப்படுத்தப்படும் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், குடியரசு தின விழாவில் பங்கேற்ற அணிவகுப்பு வாகனங்கள் பல மாவட்டங்களுக்குச் சென்று பெரும்பான்மையான மக்களின் வரவேற்பை பெற்றதாக குறிப்பிட்டுள்ளார்.

மேலும் சென்னை மெரினாவில் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ள இந்த அலங்கார ஊர்திகளை பொதுமக்கள், பள்ளி மாணவ, மாணவிகள் பார்வையிட்டு வருவதாகவும் குறிப்பிட்டுள்ள அவர், பல்வேறு தரப்பினரின் கோரிக்கையை ஏற்று மேலும் ஒரு வார காலம் இந்த அலங்கார ஊர்திகள் சென்னை மெரினாவில் காட்சிப்படுத்தப்படும் என தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com