கோவையில் அரசு மின்சார பஸ்கள் இயக்க கோரிக்கை - அதிகாரிகள் சொல்வது என்ன...?


கோவையில் அரசு மின்சார பஸ்கள் இயக்க கோரிக்கை - அதிகாரிகள் சொல்வது என்ன...?
x
தினத்தந்தி 3 Sept 2025 1:38 PM IST (Updated: 3 Sept 2025 1:45 PM IST)
t-max-icont-min-icon

சென்னையில் அரசு சார்பில் தாழ்தள மின்சார பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

கோயம்புத்தூர்

கோவை,

எரிபொருள் செலவை கட்டுப்படுத்தும் வகையிலும், காற்று மாசுபாட்டை கணிசமாக குறைக்கும் வகையிலும், பயணிகளுக்கு கூடுதல் வசதி வழங்கும் வகையிலும் சென்னையில் அரசு சார்பில் தாழ்தள மின்சார பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

ஆனால் சென்னைக்கு அடுத்தபடியாக பெரிய நகரமான கோவையில் இதுபோன்று மின்சார பஸ்கள் இதுவரை இயக்கப்படவில்லை. எனவே சென்னையை போன்று கோவையில் அரசு மின்சார பஸ்கள் இயக்கப்படுமா? என்று பயணிகள் எதிர்பார்த்து உள்ளனர்.

இதுகுறித்து கோவையை சேர்ந்த பயணிகள் கூறியதாவது:-

போக்குவரத்து கழகங்களின் செலவீனங்களை குறைத்து நிதி நிலையை மேம்படுத்த அரசு மின்சார பஸ்கள் பயன்படும். சென்னையில் இயக்கப்படும் மின்சார பஸ்களில் ஏராளமான வசதிகள் உள்ளன. அதாவது, இந்த மின்சார பஸ்கள் ஆட்டோ கியர் சிஸ்டம் உடையது. இதனால் ‘கிளச்' மிதித்து அடிக்கடி கியரை மாற்ற வேண்டிய அவசியம் டிரைவர்களுக்கு இல்லை. மேலும் இந்த பஸ்கள் டீசல், சி.என்.ஜி. பஸ்களை போன்று அதிக வெப்பத்தை உமிழ்வதில்லை.

இதுதவிர பஸ்சின் உயரத்தை அதிகப்படுத்தவும், குறைக்கவும் வசதி உள்ளது. அதாவது, அதிக அளவில் பயணிகள் ஏறிய நிலையில் பஸ் தாழ்ந்து காணப்பட்டால் பஸ்சின் உயரத்தை அதிகரிக்கலாம். மாற்றுத்திறனாளிகள் சிரமமின்றி ஏறி, இறங்கும் வகையிலான வசதிகள் அமைக்கப்பட்டு உள்ளன.

'லக்கேஜ்' வைக்க தனி இடம், அடுத்த பஸ் நிறுத்த அறிவிப்பு வெளியிடுவதற்கான ஒலிபெருக்கிகள், அவசர காலங்களில் அலாரத்தை பயன்படுத்துவதற்கான பொத்தான்கள். ஒவ்வொரு இருக்கையின் கீழும் சீட் பெல்டுகள், சார்ஜிங் மையம். தீயணைப்பு கருவிகள், முதலுதவி பெட்டிகள் என ஏராளமான வசதிகள் இந்த மின்சார பஸ்களில் உள்ளன. மின்சார பஸ்சில் இவ்வளவு சிறப்புகள் உள்ளதால் கோவையிலும் மின்சார பஸ்கள் இயக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

அதிகாரிகள் சொல்வது என்ன...?

கோவை மாவட்ட போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறும்போது, கோவை மாவட்டத்தில் காந்திபுரம் டவுன் பஸ் நிலையத்தில் இருந்து 100 தாழ்தள சொகுசு பஸ்கள் உள்பட மொத்தம் 602 டவுன் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. சென்னையை போன்று கோவையிலும் மின்சார பஸ்கள் இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்காக சார்ஜிங் மையம் அமைக்க வேண்டும். அதற்கு மின்சாரத்துறையின் அனுமதி உள்பட பல்வேறு பணிகள் உள்ளன. அதன்பிறகு தான் மின்சார பஸ்களின் சேவை தொடங்கும் என்றனர்.

1 More update

Next Story