

சென்னை,
நாமக்கல் மாவட்டம், சீதாராம்பாளையத்தை சேர்ந்தவர் வைரவேல். இவர், திராவிடர் விடுதலைக்கழகத்தின் மாவட்ட ஒருங்கிணைப்பாளராக உள்ளார். இவர், சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலை சேர்ந்த சடகோப ராமானுஜ ஜீயர், எங்களுக்கும் கல் வீசத்தெரியும். சோடா பாட்டில்களை எறியத் தெரியும். நாங்கள் எல்லாம் அமைதியானவர்கள் என்று நினைக்காதீர்கள். எதையும் செய்யும் தைரியம் எங்களுக்கும் உள்ளது என்று பேசியுள்ளார்.
இவரது பேச்சு கலவரத்தை தூண்டும் விதமாக உள்ளதாக திருச்செங்கோடு போலீசில் புகார் செய்தும், நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, வழக்குப்பதிவு செய்ய போலீசாருக்கு உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் சார்பில் வக்கீல் டி.அருண் ஆஜராகி வாதிட்டார்.
இதையடுத்து, இந்த மனுவுக்கு பதில் அளிக்கும்படி, நாமக்கல் போலீஸ் சூப்பிரண்டு, திருச்செங்கோடு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆகியோருக்கு நீதிபதி உத்தரவிட்டார்.