மனை பட்டா வழங்கக்கோரி விருத்தாசலம் தாலுகா அலுவலகத்தில் பொதுமக்கள் குடியேறும் போராட்டம்

மனை பட்டா வழங்கக்கோரி விருத்தாசலம் தாலுகா அலுவலகத்தில் பொதுமக்கள் குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மனை பட்டா வழங்கக்கோரி விருத்தாசலம் தாலுகா அலுவலகத்தில் பொதுமக்கள் குடியேறும் போராட்டம்
Published on

விருத்தாசலம், 

விருத்தாசலம் அடுத்த முகுந்தநல்லூர், பொன்னேரி, ஊ.மங்கலம், சேப்ளாநத்தம், கோ.ஆதனூர், சின்னவடவாடி, இருளக்குறிச்சி, புதுப்பேட்டை ஆகிய கிராமங்களில் வசித்து வரும் ஏழை மக்களுக்கு வீட்டு மனை பட்டா வழங்காமல் காலம் தாழ்த்தும் விருத்தாசலம் வருவாய்த்துறையினரை கண்டித்தும், மனு கொடுத்த அனைத்து பயனாளிகளுக்கு உடனடியாக வீட்டுமனை பட்டா வழங்கக்கோரியும் விருத்தாசலம் தாலுகா அலுவலகத்தில் குடியேறும் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி நேற்று போராட்டத்திற்காக விருத்தாசலம் ஸ்டேட் வங்கி பஸ் நிறுத்தத்தில் ஒன்று கூடிய பொதுமக்கள் அங்கிருந்து பாய் படுக்கை தலையணையுடன் விருத்தாசலம் தாலுகா அலுவலகம் நோக்கி ஊர்வலமாக சென்றனர்.

போராட்டம்

அப்போது அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால் பொதுமக்களுக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதுடன், லேசான தள்ளுமுள்ளும் ஏற்பட்டது. இதையடுத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் வட்ட செயலாளர் அசோகன் தலைமையில் தாலுகா அலுவலக வளாகத்தில் குடியேறிய பொதுமக்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். அப்போது அவர்கள் தாங்கள் கொண்டு வந்திருந்த பாயை விரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுபற்றி தகவல் அறிந்த விருத்தாசலம் சப்-கலெக்டர் பழனி சம்பவ இடத்துக்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தி, விரைவில் பட்டா வழங்க நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர். இதையேற்ற பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் மாதவன், மாவட்ட செயற்குழு கருப்பையன், நகர செயலாளர் கலைச்செல்வன், வக்கீல் சந்திரசேகரன், இளங்கோவன், மாரிமுத்து, ஜெயமணி, வக்கீல் குமரகுரு, சுந்தரவடிவேலு, விவசாய சங்கம் வட்ட தலைவர் கோவிந்தன், சி.ஐ.டி.யு. தொழிற்சங்கம் ஜீவானந்தம் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com