பரந்தூர் விமான நிலையத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம்; ஏகனாபுரம் கிராம சபை கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது

பரந்தூர் பகுதியில் புதிய 2-வது பசுமை விமான நிலையம் அமைக்கப்படும் என்று மத்திய, மாநில அரசுகள் தெரிவித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு கிராமங்களில் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
பரந்தூர் விமான நிலையத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம்; ஏகனாபுரம் கிராம சபை கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது
Published on

சென்னை:

காஞ்சீபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் புதிய 2-வது பசுமை விமான நிலையம் அமைக்கப்படும் என்று மத்திய, மாநில அரசுகள் தெரிவித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு கிராமங்களில் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் நேற்று காந்தி ஜெயந்தியையொட்டி ஏகனாபுரம் கிராமத்தில் ஊராட்சி மன்ற தலைவர் சுமதி தலைமையில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது.

இதில் பார்வையாளர்களாக ஸ்ரீபெரும்புதூர் தாசில்தார் ஜெயகாந்தன் ஊராட்சி தணிக்கை இணைய இயக்குனர், கிராம ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர். ஊராட்சி செயலர் கார்த்திக் கிராம ஊராட்சியின் வரவு செலவினங்களை வாசித்தார் அதன்பின் புதிய திட்டங்களுக்கான அறிவிப்புகளையும் தெரிவித்தார்.

கடந்த 67 நாட்களாக தங்கள் பகுதிக்கு விமான நிலையம் வேண்டாம் என எதிர்ப்பு தெரிவித்து போராடிவரும் நிலையில் கிராம சபை கூட்டத்தில் விமான நிலையத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இது குறித்து தாசில்தார் சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டும் பொதுமக்கள் இந்த தீர்மானத்தை கொண்டு வந்தே தீருவது என உறுதியுடன் இருந்ததால் தீர்மானம் கிராம ஊராட்சி மன்ற தீர்மான புத்தகத்தில் எழுதப்பட்டு அனைவரும் கையொப்பமிட்டனர். இதையடுத்து ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

பின்னர் அங்கு இருந்து ஊர்வலமாக பஸ்நிலையம் அருகே சென்றனர். அங்குள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து அம்பேத்கர் சிலையின் கையில் கோரிக்கை மனுவை அளித்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com