

சென்னை,
புகார் அளித்த 10 நிமிடத்தில் பிரச்சினையை சரி செய்து விடுவோம் என அமைச்சர் ஆனந்த் தெரிவித்தார்.
சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் சென்னையின் முக்கிய வணிகப் பகுதியான தி.நகர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தேங்கியுள்ள மழைநீரை அகற்றும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
மழைநீரை அகற்றும் பணிகளை அமைச்சர்கள், அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு செய்கின்றனர். இன்று தியாகராய நகர் பேருந்து நிலையம் மற்றும் அதன் உட்புறச் சாலைகளில் ஸ்கூட்டரில் வலம் வந்த தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் எ. ஆனந்த், தேங்கியுள்ள வெள்ள நீரையும், நிவாரணப் பணிகளையும் பார்வையிட்டார். தண்ணீரை விரைவாக வெளியேற்ற அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு, அங்கிருந்த பொதுமக்களை நேரில் சந்தித்து அவர்களின் குறைகளைக் கேட்டறிந்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் மழைநீர் அகற்றும் பணி குறித்து விளக்கம் அளித்தார். அவர் கூறியதாவது:-
முதல் -அமைச்சரின் உத்தரவின்படி 30 மோட்டார்கள் வைத்திருக்கிறோம். முந்தைய ஆண்டுகளில் மழை நீர் 4 முதல் 5 நாட்கள் வரை சாலையில் தேங்கி நிற்கும். தற்போது உடனுக்குடன் நடவடிக்கை எடுத்து நீர் அகற்றும் பணியை செய்து வருகிறோம். அனைத்து இடங்களிலும் அரசு ஊழியர்கள் இருக்கின்றனர். புகார் அளித்த 10 நிமிடங்களிலேயே சம்பவ இடத்திற்கு சென்று பிரச்சினையை சரி செய்து விடுவார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.