தமிழகத்தில் கால்வாய், ஏரி, குளங்கள் சீரமைப்பு பணிகள் இன்று தொடக்கம்

கிராமப்புற நீர்வளத்தை பாதுகாத்து மேம்படுத்தும் முக்கியமான முன்னெடுப்பாகும்.
தமிழகத்தில் கால்வாய், ஏரி, குளங்கள் சீரமைப்பு பணிகள் இன்று தொடக்கம்
Published on

சென்னை,

வடகிழக்கு பருவமழையையொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின்கீழ் தமிழகத்தில் 11 ஆயிரம் கால்வாய்கள், ஏரிகளை சீரமைக்கும் பணி இன்று (திங்கட்கிழமை) தொடங்குகிறது.

நீர்நிலைகள் புனரமைக்கும் பணி

புதிதாக பொறுப்பேற்றுள்ள முதல்-அமைச்சர் விஜய் தலைமையிலான தமிழக அரசு இந்த பருவமழை சவாலை சமாளிக்க ஒரு திட்டத்தை கொண்டு வந்துள்ளது. அதன்படி, சென்னை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள ஏரிகள், கூவம் ஆறு மற்றும் நீர்நிலைகளை தூர்வாரும் பணிகளை தீவிரமாக தொடங்கி உள்ளது.

இதேபோல, வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ளும் வகையில், தமிழகத்தின் கிராமப்புற நீர்வளத்தை பாதுகாத்து மேம்படுத்தும் வகையிலும் மாபெரும் நீர்நிலை புனரமைப்புப் பணிகள் இன்று (திங்கட்கிழமை) தொடங்கப்பட உள்ளன.

நீர்வளத்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-

கால்வாய், ஏரிகள்

முதல்-அமைச்சர் விஜய் உத்தரவின்படி, வளர்ச்சியடைந்த பாரதம் மற்றும் வாழ்வாதாரத் திட்டத்தின்கீழ் (விபி ஜி ராம் ஜி). தமிழ்நாட்டில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள நீர்நிலைகள் மற்றும் நீர்வரத்து கால்வாய்கள் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

இதன்படி, மாநிலம் முழுவதும் 10,185 நீர்வரத்துக் கால்வாய் கள் மற்றும் 809 ஏரிகள், குளங்கள், ஊரணிகள் ஆகியவற்றை தூர்வாரி புனரமைக்கும் பணிகள் தொடங்க உள்ளன. ரூ.500 கோடி மதிப்பீட்டில் ஒரே கட்டமாக மேற்கொள்ளப்படும் இப்பணிகள், தமிழகத்தின் கிராமப்புற நீர்வளத்தை பாதுகாத்து மேம்படுத்தும் முக்கியமான முன்னெடுப்பாகும்.

வெள்ள அபாயத்தை...

வடகிழக்கு பருவமழைக்கு முன்னதாக நீர்நிலைகளில் தேங்கியுள்ள மண், கழிவுகள் உள்ளிட்டவற்றை அகற்றி, நீர்வரத்து பாதைகளைச் சீரமைப்பதன் மூலம் மழைக்காலத்தில் கிடைக்கும் நீரை அதிகளவில் சேமிக்க முடியும். இதன் மூலம் ஏரிகள், குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகளின் நீர்த்தேக்கத்திறன் அதிகரிப்பதுடன், நிலத்தடி நீர்மட்டத்தையும் உயர்த்துவதற்கான வாய்ப்பு ஏற்படும்.

குறிப்பாக கிராமப்புறங்களில் விவசாய பாசனத்துக்கு தேவையான நீர்வளம் கிடைப்பதற்கும் இந்தப் பணிகள் பெரும் உதவியாக அமையும். அதீத மழைப்பொழிவு ஏற்படும் நேரங்களில் நீர்வரத்து கால் வாய்கள் முறையாக பராமரிக்கப்படாமல் இருப்பதன் காரணமாக மழைநீர் தேங்கி விவசாய நிலங்களிலும், குடியிருப்பு பகுதிகளிலும் வெள்ளப் பாதிப்பு ஏற்படும் நிலை உருவாகிறது.

தற்போது மேற்கொள்ளப்படும் கால்வாய் தூர்வாரும் பணிகள் மூலம் மழைநீர் தடையின்றி நீர்நிலைகளை சென்றடைய வழிவகை செய்யப்படும். இதனால் மழைநீரை சேமிப்பதோடு மட்டுமின்றி, பல்வேறு பகுதிகளில் ஏற்படும் நீர்த்தேக்கம் மற்றும் வெள்ள அபாயத்தையும் குறைக்க முடியும்.

பொதுமக்களின் பங்களிப்பு

தமிழகத்தின் கிராமப்புற நீர்நிலைகளை பாதுகாப்பது அரசின் பணியாக மட்டுமின்றி, பொதுமக்களின் பங்களிப்பும் அவசிய மான ஒன்றாக கருதப்படுகிறது. எனவே, இந்த புனரமைப்பு பணிகளில் உள்ளாட்சி அமைப்புகள், ஊர் பொதுமக்கள் மற்றும் தன்னார்வலர்களின் பங்களிப்பும் இடம்பெற உள்ளது.

முதல்-அமைச்சர் விஜய் அறிவுறுத்தலின்பேரில் நடைபெறும் இந்த மாபெரும் பணியில் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், பொதுமக்கள் மற்றும் தன்னார்வலர்கள் பெருமளவில் பங்கேற்க வேண்டும் என ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் ஆனந்த் அழைப்பு விடுத்துள்ளார்.

நீண்டகால நடவடிக்கை

கிராமப்புற நீர்வளத்தை காக்கும் நீண்டகால நடவடிக்கையான மழைநீரை வீணாக கடலில் கலக்காமல் சேமித்தல், நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்துதல், விவசாயிகளின் பாசன வசதியை மேம்படுத்துதல், வெள்ளப்பாதிப்பைத் தடுப்பது என பல்வேறு நோக்கங்களை ஒருங்கிணைத்து இந்தப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பாக பணிகள் முன்னெடுக்கப்படுவதால் வரும் மழை காலத்தில் கிடைக்கும் நீரை முழுமையாகப் பயன்படுத்துவதற்கான அடித்தளமாக உருவாகும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com