கச்சத்தீவு மீதான இந்தியாவின் இறையாண்மையை மீட்டெடுக்க வேண்டும் - பிரதமரிடம் முதல்-அமைச்சர் கோரிக்கை மனு

மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என பிரதமரிடம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
கச்சத்தீவு மீதான இந்தியாவின் இறையாண்மையை மீட்டெடுக்க வேண்டும் - பிரதமரிடம் முதல்-அமைச்சர் கோரிக்கை மனு
Published on

சென்னை,

ஆசிய கடற்கரை விளையாட்டுப் போட்டிகளை நடத்திட அனுமதி அளிக்க வேண்டும் என்றும், காற்றாலை மின் உற்பத்தியில் தமிழகத்துக்கு 50 சதவீதம் ஒதுக்க வேண்டும் என்றும் பிரதமர் நரேந்திர மோடியிடம் அளித்த கோரிக்கை மனுவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

சென்னையில் நேற்று பிற்பகல் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட பிரதமர் நரேந்திரமோடி, தனி விமானம் மூலம் இரவு மைசூரு புறப்பட்டு சென்றார். அவரை விமான நிலையத்தில் சந்தித்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், கோரிக்கை மனு ஒன்றை அளித்தார். அப்போது தலைமைச்செயலாளர் இறையன்பு உடன் இருந்தார்.

அந்த கோரிக்கை மனுவில் கூறப்பட்டு உள்ளதாவது:-

"சென்னை மெட்ரோ ரெயில் திட்டம் கட்டம் 2-ஐ கட்டம் 1-ஐ செயல்படுத்தியதை போல் மத்திய அரசும் தமிழ்நாடு அரசும் 50:50 என்ற சமவீத பங்களிப்புடன் செயல்படுத்துவதற்கான ஒப்புதலை விரைவில் வழங்குவதற்கு ஆவன செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

இந்திய அரசின் கீழ் செயல்படும் நிறுவனங்களுக்கு சொந்தமான நிலங்கள் மற்றும் பாதுகாப்புத்துறை நிலங்கள் ஆகியவற்றை விமான நிலைய செயல்பாட்டிற்காக இந்திய விமான நிலைய ஆணையத்திற்கு இலவசமாக வழங்கப்படுவதை உறுதிசெய்ய வேண்டும். விமான நிலைய விரிவாக்கம் / நவீனமயமாக்கல் பணிகளுக்கு தேவைப்படும் பாதுகாப்புத்துறை நிலங்களின் முக்கியத்துவம் மற்றும் அவசர தேவையை கருத்தில் கொண்டு இந்நேர்விற்கு அதிக முன்னுரிமை அளிக்கப்பட்டு அவசர தீர்வு காண வேண்டும்.

தோல் மற்றும் தோல் அல்லாத காலணி உற்பத்திக்கான விரிவான உற்பத்தி சார்ந்த ஊக்கச்சலுகை திட்டத்தை இந்திய அரசு அறிமுகப்படுத்த வேண்டப்படுகிறது. இது தற்போதுள்ள உற்பத்தியாளர்களின் உற்பத்தித்திறனை அதிகரிப்பதோடு, காலணி ஏற்றுமதியாளர்களுக்கு மிகவும் உகந்த இடமாக இந்தியாவை உருவாக்கும்.

சிப்காட் தன்னகத்தே நிலத்தின் உரிமையை வைத்துள்ளதாலும், தொழிற்பூங்காக்களை நிர்வகிப்பதில் தனது செயல்திறனை நிரூபித்ததாலும், சிப்காட்டை தமிழ்நாட்டில் உள்ள பி.எம். மித்ரா பூங்காவை நிர்வகிக்க மத்திய அரசு அனுமதிக்க வேண்டும்.

சென்னையில் உள்ள தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டுப் பல்கலைக்கழக வளாகத்தில் இந்திய விளையாட்டு ஆணையத்தின் மண்டல மையத்தை நிறுவுவதற்கான கருத்துரு ஏற்கனவே உள்ளது. எனவே, அங்கு இந்திய விளையாட்டு ஆணையத்தின் மண்டல மையத்தை அமைத்திட கேட்டுக் கொள்ளப்படுகிறது.

ஆசிய ஒலிம்பிக் கவுன்சிலால் ஏற்பாடு செய்யப்பட்ட ஆசிய கடற்கரை விளையாட்டு, பல்வகை விளையாட்டு நிகழ்வுகளுள் 3-வது பெரிய ஆசிய பல்வகை விளையாட்டு நிகழ்வு ஆகும். இந்த நிகழ்ச்சியை இந்தியா இதுவரை நடத்தியதில்லை. தமிழ்நாட்டில் ஆசிய கடற்கரை விளையாட்டுப் போட்டிகளை நடத்திட அனுமதி வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

சர்வதேச பல்வகை விளையாட்டு போட்டிகளை நடத்துவதற்கான தமிழ்நாட்டின் தொலைநோக்கு பார்வையை கருத்தில் கொண்டு, அடுத்த கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டிகளை நடத்துவதற்கு தமிழ்நாடு அரசு தனது விருப்பத்தை தெரிவித்துக்கொள்கிறது.

தெற்கு ரெயில்வேயின் கோரிக்கையின் அடிப்படையில், ராமநாதபுரம் மாவட்டத்தில் ராமேசுவரம் மற்றும் தனுஷ்கோடி இடையே புதிய அகல ரெயில் பாதை அமைப்பதற்காக நிலம் கையகப்படுத்துதல் மற்றும் நில உரிமை மாற்றம் செய்வதற்கான செயல்முறையை தொடங்குவதற்கு நிர்வாக அனுமதி வழங்கப்பட்டது. இருப்பினும், ராமேசுவரம் - தனுஷ்கோடி இடையே புதிய ரெயில் பாதை அமையும் பகுதியில், பலவீனமான சுற்றுச்சூழல் அமைப்பைக் கருத்தில் கொண்டு, புதிய ரெயில் பாதை அமைப்பதற்கு இந்தப் பகுதி பொருத்தமானது அல்ல என்று தமிழ்நாடு அரசு கருதுகிறது.

தமிழ்நாடு கடற்கரையில் மிகப்பெரிய அளவிலான காற்றாலை மின்திட்டங்கள் அமைப்பதற்கான வளங்கள் உள்ளன. ஆரம்பக்கட்ட ஆய்வறிக்கையில் அதிகபட்சமாக 31 ஜிகாவாட் அமைப்பதற்கான சாத்தியகூறுகள் கண்டறியப்பட்டு உள்ளன. மேலும் ராமநாதபுரம் மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களின் கடற்கரையோரங்களில் வினாடிக்கு 9 மீட்டர் முதல் 12 மீட்டர் வரையிலான அதிகபட்ச காற்றின் வேகம் இருப்பதாக கண்டறியப்பட்டு உள்ளது.

தமிழ்நாடு மீனவர்களையும் கடலோர காற்றாலை மின் திட்டங்கள் அமைக்க ஒருங்கிணைத்து அவர்களை தொடர்ந்து இத்திட்டத்தில் பங்கேற்க செய்வதில் தமிழ்நாடு மாநிலத்தின் மிகப்பெரிய பங்களிப்பு உள்ளது. காற்றாலைகளில் இருந்து

பெறப்படும் மொத்த மின்சாரத்தில் 50 சதவீதத்தை அதன் சொந்த மாநிலமான தமிழகத்திற்கே ஒதுக்கீடு செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

கடினப் புருவங்களுடன் கூடிய 2 வழிச்சாலைகளுக்கு சுங்கக்கட்டணம் வசூலிப்பதில் இருந்து விலக்கு அளிக்கப்பட வேண்டும். பரனூர் மற்றும் ஆத்தூர் சுங்கச்சாவடிகளில் சுங்கக்கட்டணம் 40 சதவீதமாக குறைக்கப்படவேண்டும். 4 வழிச்சாலைக்கான வாகனகொள் திறனை கடந்த சாலைகளில் 6/8 வழிச்சாலையாக அகலப்படுத்தி தேவைப்படும் இடங்களில் போதுமான மேம்பாலங்கள் / வாகன கீழ்ப்பாலங்கள், சேவைச்சாலைகள் அமைக்கும் வரை சுங்கக்கட்டணம் வசூலிப்பதில் இருந்து விலக்கு அளிக்கப்பட வேண்டும்.

சர்வதேச கடல் எல்லை கோட்டை தாண்டிச்செல்லும் நிகழ்வுகளில் தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் அவர்களது பாரம்பரிய கடற்பரப்பில் மீன்பிடிக்கும் போது அடிக்கடி கைது செய்யப்படுகின்றனர்.

நமது மீனவர்கள் மற்றும் அவர்களது மீன்பிடி படகுகள் இலங்கை அரசால் நீண்டகாலமாக சிறையில் அடைக்கப்படுவது தமிழக மீனவர்கள் மத்தியில் கவலையையும் பாதுகாப்பின்மையையும் ஏற்படுத்தியுள்ளது. எனவே, பாக்வளைகுடா பகுதிகளில் மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமைகளை பாதுகாத்து அவர்களின் பாதுகாப்பையும் உறுதி செய்திட கேட்டுக்கொள்ளப்படுகிறது.

இந்த பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வுகாண கச்சத்தீவு மீதான இந்தியாவின் இறையாண்மையை மீட்டெடுப்பதன் மூலமே, பாரம்பரிய கடற்பரப்பில் மீன்பிடிக்கும் உரிமையை மீட்டெடுக்க முடியும் என்பதை தமிழ்நாடு அரசு மீண்டும் வலியுறுத்துகிறது.

இலங்கை தமிழர்கள் விவகாரம் - ஈழத் தமிழர்களுக்கு சமமான குடிமுறை மற்றும் அரசியல் உரிமைகள் அளிப்பது தொடர்பாக இலங்கை அரசை வலியுறுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது."

இவ்வாறு அந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com