

சென்னை,
மருத்துவமனைகளில் டாக்டர்கள் ‘வீடியோ' எடுக்க கட்டுப்பாடுகளை விதித்து தேசிய மருத்துவ ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
தேசிய மருத்துவ ஆணையம் வெளியிட்டுள்ள உத்தரவு வருமாறு:-
மருத்துவமனைகள், மருத்துவ நிறுவனங்கள் மற்றும் பதிவுபெற்ற டாக்டர்கள் ஆகியோர் எத்தகைய விளம்பரங்களை மேற்கொள்ளலாம் என்பது தொடர்பான புதிய நிபந்தனைகள் அடங்கிய வழி காட்டுதல்கள் வெளியிடப்படுகின்றன.
மருத்துவத் துறையின் கண்ணியத்தைப் பாதுகாக்கவும், நோயாளிகளைத் தவறாக வழிநடத்தும் விளம்பரங்களை தடுக்கவும் சுப்ரீம் கோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கை அடிப்படையாகக் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி, மருத்துவமனைகளோ, டாக்டர்களோ தங்களது சேவைத் தரம் சிறப்பாக இருப்பதாக காட்டிக் கொள்வதற்கு சமூக வலைதளங்களில் பணம் கொடுத்து விளம்பரப்படுத்தக் கூடாது (ரீல்ஸ் வீடியோ உள்ளிட்டவை). அதேபோன்று 'கூகுள்' போன்ற தளங்களில் தரவரிசை (ரேட்டிங்) மற்றும் கருத்துகளை நோயாளிகளை நிர்பந்தப்படுத்தி போலியாக பதிவு செய்யக்கூடாது.
வணிக நோக்கத்துக்காக ஏ.ஐ. மூலம் உருவாக்கப்படும் விளம்பரங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேவேளையில் ஏ.ஐ. மூலம் உருவாக்கப்படும் கல்வி அல்லது விழிப்புணர்வு சார்ந்த தகவல்களுக்கு எந்த கட்டுப்பாடும் இல்லை. அவற்றை "ஏ.ஐ. மூலம் உருவாக்கப்பட்டது" என்ற தகவல்களுடன் பயன்படுத்தலாம். டாக்டர்கள் மற்றும் மருத்துவமனைகள் சமூக வலை தளங்களில் தகவல்களைப் பகிரும்போது. அவர்களின் பெயர், கல்வித்தகுதி மற்றும் மருத்துவக் கவுன்சில் பதிவு எண்ணை வெளிப்படையாகக் குறிப்பிட வேண்டும்.
நோயாளிகளின் புகைப்படங்கள், சிகிச்சைக்கு முன்னும், பின்னும் எடுக்கப்பட்ட படங்கள் அல்லது வீடியோக்களை விளம்பரங்களுக்காகப் பயன்படுத்தக்கூடாது. நோயாளிகள் அனுமதி அளித்திருந்தாலும் அவற்றை பகிரக்கூடாது. மேலும், 100 சதவீதம் குணமளிப்பதாக போலி உத்தரவாதம், பிற ஆஸ்பத்திரிகளை விடச் சிறந்தது என்ற தவறான ஒப்பீடுகள் அல்லது ஆதாரமற்ற தகவல்களை விளம்பரம் செய்யக்கூடாது. இந்த வழிகாட்டுதல்கள் உடனடியாக அமலுக்கு வருகின்றன. இதனை மீறுவோர் மீது உரிய ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.