கீழடி 5 மற்றும் 6 ஆம் கட்ட அகழாய்வு முடிவுகள் விரைவில் வெளியிடப்படும் - உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தமிழக அரசு தகவல்

கீழடியில் மேற்கொள்ளப்பட்ட 5 மற்றும் 6 ஆம் கட்ட அகழாய்வு குறித்து விரைவில் முடிவுகள் வெளியிடப்படும் என உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தமிழக அரசு தகவல்
கீழடி 5 மற்றும் 6 ஆம் கட்ட அகழாய்வு முடிவுகள் விரைவில் வெளியிடப்படும் - உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தமிழக அரசு தகவல்
Published on

மதுரை,

தமிழகத்தில் கீழடி, ஆதிச்சநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் பல்வேறு கட்டங்களாக தொல்லியல் அகழாய்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதுவரை மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில் பழங்கால தமிழர்கள் பயன்படுத்திய பல தொன்மையான பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்த ஆய்வை தொடர்ந்து மேற்கொள்ளும் பட்சத்தில், பழந்தமிழர்கள் பற்றிய பல அரிய உண்மைகள் வெளிவர வாய்ப்புள்ளது என தமிழ் அறிஞர்கள் மற்றும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

இதற்கிடையில் கீழடியில் மேற்கொள்ளப்பட்ட 5 மற்றும் 6 ஆம் கட்ட ஆய்வுகளின் முடிவுகளை விரைவில் வெளியிட வலியுறுத்தி வழக்கறிஞர் திருமுருகன் உள்ளிட்ட பலர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுக்கள் நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.புகழேந்தி ஆகியோர் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், தமிழக தொல்லியல் துறையில் உள்ள காலிப்பணியிடங்களுக்கு டிஎன்பிஎஸ்சி மூலம் ஆட்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்களுக்கு விரைவில் பணி நியமனம் செய்யப்பட உள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் ஆதிச்சநல்லூர், கொடுமணல், கொற்கை, மயிலாடும்பாறை உள்ளிட்ட 7 இடங்களில் தொல்லியல் ஆய்வை தொடர மத்திய தொல்லியல் துறையிடம் தமிழக தொல்லியல் துறை அனுமதி கேட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

மத்திய தொல்லியல் துறையிடம் இருந்து அனுமதி கிடைத்ததும் தமிழகத்தில் விரைவில் அகழாய்வு பணிகள் துவங்கும் என்றும் கீழடியில் மேற்கொள்ளப்பட்ட 5 மற்றும் 6ம் கட்ட ஆய்வுகள் குறித்த முடிவுகள் விரைவில் வெளியிடப்படும் என்றும் தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் தெரிவித்தார்.

இதனையடுத்து, தமிழக தொல்லியல் துறை விண்ணப்பத்தின் மீது எப்போது மத்திய தொல்லியல் துறை அனுமதி கிடைக்கும்? தமிழகத்தில் ஏன் முழுமையாக மத்திய தொல்லியல் துறை ஆய்வு மேற்கெள்ளக் கூடாது? என்பது உள்ளிட்ட கேள்விகளை எழுப்பிய நீதிபதிகள், இது குறித்து மத்திய அரசு தரப்பில் பதிலளிக்க வேண்டுமென உத்தரவிட்டு விசாரணையை ஒத்தி வைத்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com