சில்லறை பிரச்சினை...போதையில் அரசு பேருந்தை கடத்திய நபரால் பரபரப்பு

அரசு பஸ் திருடப்பட்டு விபத்து ஏற்படுத்தப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை,
சென்னை நீலங்கரை அருகில் உள்ள சுங்கச்சாவடி பகுதியில் லாரி ஒன்று சாலை ஓரம் நின்றுகொண்டிருந்தது. அப்போது அந்த வழியாக திருவான்மியூரில் இருந்து கோவளம் நோக்கி சென்ற அரசு பேருந்து சாலை ஓரத்தில் நின்றுகொண்டிருந்த லாரி மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது.
இதனால் லாரி டிரைவர் ரோந்து பணியில் உள்ள போலீசாரிடம் தகவல் தெரிவித்தார். தகவலின் பேரில் அரசு பேருந்தின் டிரைவரை போலீசார் தீவிரமாக தேடினர். நீலாங்கரையை தாண்டி சாலை ஓரம் பேருந்து நிற்பதை கண்டுபிடித்தனர். அதன் டிரைவர் பஸ்சில் உறங்கி கொண்டிருந்தார். அவரிடன் விபத்து குறித்து போலீசார் நடத்திய விசாரணையில் அவர் அரசு பேருந்தின் டிரைவரே இல்லை என திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்துள்ளது.
மேலும் போலீசார் அவரிடம் நடத்திய விசாரணையில் அவர் சென்னை பெசன்ட்நகரைச் சேர்ந்த ஆபிரகாம்(வயது 35) எனவும் இவர் அரசு பஸ் டிரைவர் இல்லை எனவும் தெரியவந்துள்ளது.
இவர் நேற்று இரவு அரசு பேருந்து ஒன்றில் பயணித்துள்ளார். அப்போது பேருந்தின் நடத்துநர் சில்லறை பாக்கி விஷயத்தில் ஆப்ரஹாமை மரியாதைக்குறைவாக நடத்தியதாக கூறப்படுகிறது. இதனால் ஆப்ரஹாம் கோபத்தில் மது அருந்திவிட்டு திருவான்மியூர் பேருந்து நிறுத்துமிடத்திற்கு வந்தார். அப்போது தன்னை தரக்குறைவாக நடத்திய நடத்துநரை பழிவாங்க வேண்டும் என்ற எண்ணத்தில் யாருக்கும் தெரியாமல் அங்கு நின்ற ஒரு பஸ்சுக்குள் புகுந்து சத்தமே இல்லாமல் ரகசியமாக பேருந்தை திருடி மகாபலிபுரம் நோக்கி பஸ்சை ஓட்டிச் சென்றார்.
அப்போதுதான் லாரி மீது பஸ்சை மோதிவிட்டு நிற்காமல் சென்றிருக்கிறார். போலீசார் விசாரணையில் இந்த தகவல் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர். அரசு பஸ் திருடப்பட்டு விபத்து ஏற்படுத்தப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.






