

தென்காசி,
தென்காசி மாவட்டம் புளியரை பகுதியில் தோட்டத்திற்கு சென்ற ஓய்வுபெற்ற நெடுஞ்சாலைத்துறை ஊழியரை காட்டு யானை மிதித்து கொன்றது. இதனை கண்டித்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தென்காசி மாவட்டம் புளியரை பகுதியில் தட்சிணாமூர்த்தி கோவில் உள்ளது. இதன் அருகே உள்ள தோப்பிற்கு, ஓய்வுபெற்ற நெடுஞ்சாலைத்துறை ஊழியரான சுப்பையா என்பவர் நேற்று வழக்கம் போல் சென்றார்.
அப்போது அந்த பகுதியில் சுற்றி திரிந்த ஒற்றை காட்டு யானை ஒன்று, திடீரென சுப்பையாவை வழிமறித்து தாக்கியது. இதில் படுகாயமடைந்த அவர், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
சிறிது நேரத்திற்கு பிறகு அந்த பகுதிக்கு வந்த உறவினர்கள், சுப்பையா யானை மிதித்து இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்து கதறி அழுதனர். இதுகுறித்து உடனடியாக வனத்துறை மற்றும் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
தகவல் அறிந்த போலீசார் மற்றும் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அப்போது, "இந்த பகுதியில் நீண்ட நாட்களாக வனவிலங்குகள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. இதுகுறித்து பலமுறை புகார் அளித்தும் வனத்துறையினர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை" என கூறி, சுப்பையாவின் உடலை எடுக்க விடாமல் உறவினர்களும், பொதுமக்களும் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து, சுப்பையாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தால் புளியரை பகுதியில் சிறிது நேரம் பெரும் பரபரப்பு நிலவியது.