

சென்னை,
சென்னை மற்றும் கொல்கத்தா ஐகோர்ட்டில் நீதிபதியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர் கர்ணன். இவர் சுப்ரீம் கோர்ட்டு மற்றும் ஐகோர்ட்டு நீதிபதிகள், அவர்கள் வீட்டு பெண்கள் மற்றும் பெண் வக்கீல்கள் பற்றியும் தரக்குறைவாக பேசி, அதனை வீடியோ பதிவாக வெளியிட்டிருந்தார்.
இந்த வீடியோ பதிவு சமூக வலைதளங்களில் பரவியது. இதையடுத்து, அவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி சென்னை ஐகோர்ட்டு பெண் வக்கீல்கள், சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிக்கு கடிதம் எழுதினர். மேலும், இது தொடர்பாக பெண் வக்கீல் ஒருவர் மத்திய குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார்.
இதையடுத்து சைபர் கிரைம் போலீசார் நீதிபதி கர்ணன் மீது வழக்குப்பதிவு செய்து, கடந்த 2-ந் தேதி ஆவடியில் உள்ள அவரது வீட்டில் வைத்து கைது செய்து விசாரணை நடத்தினர்.
பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி, சைதாப்பேட்டையில் உள்ள கிளை சிறையில் அடைத்தனர். இந்தநிலையில் சிறையில் இருந்த கர்ணனுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. மிகவும் உடல் சோர்வாக இருந்த அவரை சிறைத்துறை போலீசார் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் நேற்று முன்தினம் அனுமதித்தனர்.
அங்கு அவருக்கு, பல்வேறு பரிசோதனைகள் செய்யப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. பரிசோதனையில், அவர் கடந்த 4 நாட்களாக சரியாக சாப்பிடாமல் இருந்துள்ளதாகவும், இதனால் அவரது உடல் சோர்வு அடைந்துள்ளதாகவும், அவருக்கு தேவையாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் மருத்துவமனை டீன் டாக்டர் பாலாஜி தெரிவித்தார். மேலும் நீதிபதி கர்ணனுக்கு கொரோனா பரிசோதனையும் செய்யப்பட்டது.
இந்த பரிசோதனை முடிவு நேற்று வெளியானது. பரிசோதனை முடிவில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அவரை டாக்டர்கள் மருத்துவமனையில் தனிமைப்படுத்தி சிகிச்சை அளித்து வருகின்றனர்.