ஓய்வு பெற்ற நீதிபதி எம்.எஸ்.ஜனார்த்தனம் மறைவு: காவல்துறை மரியாதையுடன் இறுதி அஞ்சலி- மு.க.ஸ்டாலின் ஆணை


ஓய்வு பெற்ற நீதிபதி எம்.எஸ்.ஜனார்த்தனம் மறைவு: காவல்துறை மரியாதையுடன் இறுதி அஞ்சலி- மு.க.ஸ்டாலின் ஆணை
x

சென்னை ஐகோர்ட்டு ஓய்வு பெற்ற நீதிபதி எம்.எஸ்.ஜனார்த்தனம் உடல்நலக் குறைவால் இன்று இயற்கை எய்தினார்.

சென்னை

தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:

சென்னை உயர்நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதி, தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் முன்னாள் தலைவர் மற்றும் மாநில நுகர்வோர் குறைதீர் ஆணையத்தின் முன்னாள் தலைவருமான நீதிபதி எம்.எஸ்.ஜனார்த்தனம் (வயது 89) உடல்நலக் குறைவால் இன்று (6.6.2025) இயற்கை எய்தினார்.

நீதிபதி எம்.எஸ்.ஜனார்த்தனம், 1988-ம் ஆண்டு முதல் 1998-ம் ஆண்டு வரை சென்னை ஐகோர்ட்டு நீதிபதியாக பணியாற்றி வரலாற்று சிறப்புமிக்க பல தீர்ப்புகளை வழங்கியவர். தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் தலைவராக 2006-ம் ஆண்டில் நியமிக்கப்பட்ட இவர், 2015-ம் ஆண்டு வரை அப்பொறுப்பில் நீடித்தார்.

இவரது பரிந்துரையின் அடிப்படையில்தான் தமிழகத்தில் இஸ்லாமியர்கள் இட ஒதுக்கீடு, கிறித்தவர்கள் இட ஒதுக்கீடு, அருந்ததியர் இட ஒதுக்கீடு ஆகியவை நடைமுறைப்படுத்தப்பட்டன. சமூகநீதி வரலாற்றில் தமது முத்திரையை மிகவும் ஆழமாக பதித்தவர் இவர். நீதிபதி எம்.எஸ்.ஜனார்த்தனம் அவர்களின் மறைவு சமூக நீதித்துறைக்கு ஏற்பட்ட ஈடு செய்ய முடியாத இழப்பு ஆகும்.

அவர் நீதி துறைக்கும், மாநிலத்திற்கும் ஆற்றிய சேவையை போற்றும் வகையில் அவரது இறுதி நிகழ்வு காவல் துறை மரியாதையுடன் நடைபெறும் என்று தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

1 More update

Next Story