மயிலாடுதுறையில் வாக்குச்சாவடி அருகே தலைமை காவலருக்கு கத்திக்குத்து - ஓய்வு பெற்ற ராணுவ வீரர் கைது

தாக்குதல் நடத்திய பிரபாகரன் காவல்துறை மீது மிகுந்த வெறுப்பில் இருந்து வந்தார் என்று கூறப்படுகிறது.
மயிலாடுதுறையில் வாக்குச்சாவடி அருகே தலைமை காவலருக்கு கத்திக்குத்து - ஓய்வு பெற்ற ராணுவ வீரர் கைது
Published on

மயிலாடுதுறை,

தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பொதுமக்கள் அதிகாலை முதலே வாக்குச்சாவடிக்கு சென்று நீண்ட வரிசைகளில் காத்திருந்து ஆர்வத்துடன் வாக்கு செலுத்தி வருகின்றனர்.

அந்த வகையில், மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகார் தொகுதிக்கு உட்பட்ட பொறையார் ஜமாலியா நடுநிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு நடைபெற்றுக் கொண்டிருந்த நிலையில், அங்கு குற்றாலம் காவல் நிலையத்தை சேர்ந்த தலைமைக் காவலர் விக்னேஷ் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார்.

அப்போது அங்கு வாக்கு செலுத்த வந்த ஓய்வு பெற்ற ராணுவ வீரரான பிரபாகரன், தன்னிடம் இருந்த கத்தியை எடுத்து திடீரென விக்னேஷ் மீது சரமாரியாக கத்திக்குத்து தாக்குதல் நடத்தினார். இதில் காவலர் விக்னேஷின் கழுத்து மற்றும் கைகளில் வெட்டுக் காயங்கள் ஏற்பட்டன.

காயமடைந்த காவலர் விக்னேஷ் உடனடியாக பொறையார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு 15-க்கும் மேற்பட்ட தையல்கள் போடப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. அதே சமயம், தாக்குதல் நடத்திய பிரபாகரனை போலீசார் மடக்கிப் பிடித்து கைது செய்தனர்.

பொறையார் அருகே உள்ள காட்டுச்சேரி பகுதியை சேர்ந்த பிரபாகரன், காவல்துறை மீது மிகுந்த வெறுப்பில் இருந்து வந்தார் என்றும், போலீஸ் சீருடையை கண்டாலே தனக்கு பிடிக்காது என்றும் அவர் கூறி வந்ததாக தெரியவந்துள்ளது. ஏற்கனவே சில வருடங்களுக்கு முன்பு விநாயகர் சதுர்த்தியின்போது காவலர் ஒருவரை அரிவாளால் வெட்டியதாக பிரபாகரன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com