கோரிக்கைகளை வலியுறுத்தி போராடிய வருவாய்த்துறையினர் கைது: ராமதாஸ் கண்டனம்

வருவாய்த்துறையினர் கோரிக்கைகளை அரசு உடனே நிறைவேற்ற வேண்டும் என்று பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
கோரிக்கைகளை வலியுறுத்தி போராடிய வருவாய்த்துறையினர் கைது: ராமதாஸ் கண்டனம்
Published on

பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

வருவாய்த்துறையில் பணியாற்றுபவர்களுக்கு மேம்படுத்தப்பட்ட ஊதியம் மற்றும் தனி ஊதியம் வழங்க வேண்டும். உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்தில் அரசு ஊழியர்கள் 10 சதவீதம் பங்களிப்பு என்பதை ரத்து செய்ய வேண்டும். காலிப் பணியிடங்களை காலமுறை ஊதியத்தில் நிரப்ப வேண்டும். வருவாய், பேரிடர் மேலாண்மை துறை, நில அளவைத் துறையில் பணியாற்றும் அனைத்து நிலையிலான அலுவலர்களின் உயிர் மற்றும் உடைமைகளை பாதுகாக்க வேண்டும். குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்க சிறப்பு பணி பாதுகாப்பு சட்டம் இயற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஒரு நாள் மறியல், 2 நாள்கள் கோரிக்கை அட்டை அணிதல் என தொடக்கக் காலப் போராட்டங்களை நடத்தி அரசு செவி சாய்க்காததால் கடந்த 24-ம் தேதி முதல் பணி புறக்கணிப்பு மற்றும் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கடந்த 8 நாள்களாக வருவாய்த் துறையில் வட்டாட்சியர் முதல் அலுவலக உதவியாளர்கள், கிராம உதவியாளர்கள் வரை பணிகளை புறக்கணித்து வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் நில அளவீடு செய்வது, பட்டா மாற்றம் செய்வது, இருப்பிடம், சாதி, வருமானம் உள்ளிட்ட அனைத்து வகையான சான்றிதழ்கள் பெறுவது போன்ற பொதுமக்களின் அன்றாட பணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. மேலும் மாணவர்களுக்கான பல்வகையான நுழைவு தேர்வுகள் வர உள்ள நிலையில் சான்றிதழ் பெற முடியாத நெருக்கடியான நிலை உள்ளது. இந்த சூழலில் கோரிக்கைகள் தொடர்பாக கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர்களை அரசு அழைத்து பேசாததால் இன்று மாவட்டத் தலைநகரங்களில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட அலுவலர்கள், ஊழியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சட்டம் ஒழுங்கு பிரச்சினையை கையாள வேண்டிய அதிகாரிகளையே கைது செய்திருக்கும் இந்த நடவடிக்கை மிகவும் வன்மையாக கண்டிக்கத்தக்கது.

வருவாய்த்துறை அலுவலர்கள், ஊழியர்கள் வழக்கமான அரசு பணிகளை மட்டும் அல்லாமல் அரசின் சிறப்பு திட்டங்களை பொதுமக்களிடம் கொண்டுசேர்ப்பதற்காகவும் இரவு பகலாக பணியாற்றுகின்றனர். அதுமட்டுமல்லாமல் விவசாயிகள், தொழிலாளர்கள், மாணவர்கள் என அனைத்து தரப்பு பொதுமக்களும் அவரவர்களின் கோரிக்கைகளுக்காக திடீர் போராட்டங்கள் நடத்துகின்ற போதும், ஆக்கிரமிப்புகள் அகற்றுதல், மணல் உள்ளிட்ட கனிம வளங்கள் திருடுதல், கடத்துதல் போன்ற சட்டம் ஒழுங்கு பிரச்சினைகளில் ஈடுபடுபவர்களை தடுப்பதற்காகவும் நேரம் காலம் பார்க்காமல் சம்பவ இடத்திற்கு சென்று பிரச்சினைகள் ஏற்படாத வண்ணம் சமரசம் செய்தும், அரசு சொத்துக்களை பாதுகாக்கும் நடவடிக்கைகளிலும் ஈடுபடுகின்றனர்.

இதுபோன்ற நிகழ்வுகளுக்கு செல்லும் போது போராட்டக்காரர்களாலோ, கடத்தல்காரர்களாலோ, சமூகவிரோதிகளாலோ அலுவலர்களுக்கு அச்சுறுத்தலும், உயிருக்கு பாதுகாப்பற்ற சூழலும் நிலவுகிறது. அதற்காக அவர்கள் சிறப்பு ஊதியம் கேட்பதும், பணி பாதுகாப்பு சட்டம் கேட்பதும் நியாயமானது. அரசுக்காகவும், மக்களுக்காகவும், பொது சொத்தை காப்பாற்றுவதற்காகவும் பாடுபடும் அவர்களின் கோரிக்கையில் உள்ள நியாயத்தை அரசு புரிந்து கொள்ள வேண்டும். அதேபோல் பணியின் போது இறந்தவர்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையிலான வேலை என்பது 25 விழுக்காடாக இருந்ததை 5 விழுக்காடாக குறைத்திருப்பது முறையானது அல்ல. மேலும் அரசின் நிர்வாகத் துறையில் 14,000-க்கும் மேற்பட்ட காலியிடங்கள் உள்ள நிலையில் பதிவு மூப்பு அடிப்படையிலோ அல்லது அரசு பணியாளர் தேர்வாணையம் மூலமாகவோ நிரப்பாமல் காலியிடங்களாக வைத்துக் கொண்டிருப்பதும், மற்றொரு பக்கம் வெளி பணி ஆள் சேர்ப்பு மூலம் ஒவ்வொரு தாலுக்காவுக்கும் இரண்டு பணியாளர்கள் என நியமித்திருப்பதும் தவறான செயலாகும்.

எனவே நியாயமான கோரிக்கைகளை முன்வைத்து போராட்டத்தில் ஈடுபட்டு, கைதாகியுள்ள அரசு அலுவலர்கள் மற்றும் ஊழியர்களை உடனே விடுதலை செய்வதோடு, போராடும் கூட்டமைப்பு நிர்வாகிகளை உடனே அழைத்துப் பேசி சுமுகத் தீர்வு காண வேண்டும் என வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com