டிக்கெட் பரிசோதனை மூலம் ரூ.160.75 கோடி வருவாய் - தெற்கு ரெயில்வே தகவல்

நிர்ணயிக்கப்பட்ட இலக்கைவிட கூடுதலாக வருவாய் கிடைத்திருப்பதாக அதிகாரிகள் கூறினர்.
டிக்கெட் பரிசோதனை மூலம் ரூ.160.75 கோடி வருவாய் - தெற்கு ரெயில்வே தகவல்
Published on

சென்னை,

தெற்கு ரெயில்வேயில் ரெயில் பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் பயணிகளின் வசதிக்காக பல்வேறு புதிய ரெயில் சேவைகளை அறிமுகம் செய்து வருகிறது. இதுஒருபுறம் இருக்க, ரெயில்களில் பயணம் செய்யும் பயணிகள் சிலா் டிக்கெட் இன்றி பயணம் மேற்கொள்வது வாடிக்கையாகி வருகிறது.

இதை தடுக்கும் வகையில், டிக்கெட் பரிசோதகர்கள் மற்றும் சிறப்பு கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு சோதனை மேற்கொள்ளப்படுகிறது. இவர்கள் டிக்கெட் இல்லாமல் பயணம் செய்யும் பயணிகளுக்கு அபராதம் விதித்து வருகின்றனர். இதன் மூலம் வரும் வருவாய் ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து வருகிறது.

அந்தவகையில், தெற்கு ரெயில்வேயில் கடந்த 2024-25-ம் நிதியாண்டில் டிக்கெட் பரிசோதனை முறையில் ரூ.129.82 கோடி வருவாய் கிடைத்துள்ளது. இந்த வருவாய் 2025-26-ம் நிதியாண்டில் ரூ.160.75 கோடியாக உயர்ந்திருப்பதாக ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர். டிக்கெட் பரிசோதனை முறையில் ஆண்டுக்கு ரூ.142.81 கோடி மட்டுமே ரெயில்வே வாரியம் இலக்காக நிர்ணயித்திருந்ததாகவும், ஆனால், இலக்கைவிட கூடுதலாக வருவாய் கிடைத்திருப்பதாகவும் அதிகாரிகள் கூறினர்.

டிக்கெட் பரிசோதனையில் வருவாய் அதிகரிப்பதால், முறையாக டிக்கெட் இல்லாமல் பயணம் செய்யும் பயணிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும், இதை தடுக்க தெற்கு ரெயில்வே கூடுதல் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சமூக ஆர்வலர்கள் பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com