

சென்னை,
வடகிழக்குப் பருவமழையினை முன்னிட்டு சென்னை மாநகராட்சி பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பான ஆய்வுக்கூட்டம் மேயர் பிரியா தலைமையில் இன்று நடைபெற்றது. இது தொடர்பாக, சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:-
வடகிழக்குப் பருவமழையினை முன்னிட்டு சென்னை மாநகராட்சி பகுதிகளில் ! முதல் 15 வரையிலான மண்டலங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பான ஆய்வுக்கூட்டம் மேயர் பிரியா தலைமையில் இன்று ரிப்பன் கட்டட அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில், துணை மேயர் மு.மகேஷ்குமார், மாநகராட்சி ஆணையாளர் ஜி.எஸ்.சமீரன், இணை ஆணையாளர் (கல்வி) க கற்பகம், துணை ஆணையாளர்கள் தாக்கரே சுபம் ஞானதேவ்ராவ்,(சுகாதாரம்), சித்ரா விஜயன்,(வருவாய் (ம) நிதி), வட்டார துணை ஆணையாளர்கள் ஸ்வேதா சுமன், (வடக்கு), எச்.ஆர்.கெளஷிக், (மத்தியம்), அதாப் ரசூல், (தெற்கு) மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் மேயர் பேசும்போது தெரிவித்ததாவது:-
மாநகராட்சி, நெடுஞ்சாலைத்துறை, நீர்வளத்துறையின் சார்பில் பராமரிக்கப்பட்டு வரும் ஆறுகள், கால்வாய்கள், ரெயில்வே குறுக்கு கால்வாய்கள், மழைநீர் வடிகால்களில் மேற்கொள்ளப்படும் தூர்வாரும் பணிகள், வண்டல் வடிகட்டி தொட்டிகளில் தூர்வாரும் பணிகள், புதிதாக கட்டப்பட்டு வரும் மழைநீர் வடிகால் பணிகள் மற்றும் இணைப்பு பணிகள், கால்வாய் மேம்பாட்டு பணிகள், சுரங்கப்பாதைகளில் உள்ள கிணறுகளில் மேற்கொள்ளப்படும் தூர்வாரும் பணிகள் ஆகியவற்றை பருவமழைக்கு முன்னதாக விரைந்து முடித்திட வேண்டும்.
மழைநீர் தேங்க வாய்ப்புள்ள தாழ்வான பகுதிகளில் மோட்டார் பம்புகளை தயார்நிலையில் வைக்க வேண்டும். மேலும், மோட்டார் பம்புகள், மர அறுவை இயந்திரங்கள் உள்ளிட்ட அனைத்து வகை இயந்திரங்கள் மற்றும் வாகனங்கள் செயல்படும் வகையில் உள்ளதா என பரிசோதித்து தயார்நிலையில் வைத்திட வேண்டும்.
பொதுமக்களை தங்க வைப்பதற்கான 215 நிவாரண முகாம்களில் அனைத்து அடிப்படை வசதிகளும் உள்ளதா எனவும், 116 உணவு தயாரிக்கும் மைய சமையல் கூடங்களில் உணவுப் பொருட்களின் இருப்பு உள்ளிட்டவற்றை ஆய்வு செய்து போதுமான அளவு இருப்பு இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
புழல் மற்றும் கொசஸ்தலையாறு உபரிநீர் வெளியேறும் இடத்தில் தூர்வாரும் பணிகளை மேற்கொள்ள வேண்டும். பேருந்து சாலைகள் மற்றும் உட்புற சாலைகளில் உள்ள பள்ளங்கள் மற்றும் குழிகள் ஆகியவற்றை பருவமழைக்கு முன்னதாக சரிசெய்ய வேண்டும்.
கொரட்டூர் ஏரி, மயிலை பாலாஜி நகர் கால்வாய், பராங்குசபுரம், இரங்கராஜபுரம், சிட்டி லிங்க் சாலை, மவுண்ட் ரோடு, ஜி.பி. சாலை, என்.எஸ்.சி. போஸ் சாலை, அரும்பாக்கம் மெட்ரோ உள்ளிட்ட பகுதிகளில் முன்னெச்சரிக்கை பணிகளை மேற்கொள்ள வேண்டும். மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அதிகளவிலான மருத்துவ முகாம்களை தொடர்ந்து நடத்த வேண்டும்.
மழைக்காலங்களில் மாநகராட்சியின் 1913 என்ற உதவி எண் மையம், ட்விட்டர், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பொதுமக்களிடமிருந்து வரும் புகார்களை பெற்று உடனடி நடவடிக்கை மேற்கொள்ள ஏதுவாக பணியாளர்களை சுழற்சி முறையில் பணியமர்த்த வேண்டும். மழையினால் மக்கள் பாதிக்காதவாறு அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மழைக்கு முன்னதாக விரைந்து முடித்திட வேண்டும் என தெரிவித்தார்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.