50 சதவீத மானியத்தில் நெல் நுண்ணூட்ட உரங்கள்

சம்பா, தாளடி பயிர்கள் மஞ்சள் நிறமாக மாறுவதை தடுத்திட 50 சதவீத மானியத்தில் நெல் நுண்ணூட்ட உரங்கள் வழங்கப்படுவதாக மயிலாடுதுறை வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் சுப்பையன் தெரிவித்துள்ளார்.
50 சதவீத மானியத்தில் நெல் நுண்ணூட்ட உரங்கள்
Published on

நூண்ணூட்ட சத்து

தற்போது பகலில் நிலவும் வெப்பமும், இரவில் நிலவும் குளிர்ந்த பனியுடன் அவ்வப்போது மழைத்தூறல் நிகழ்வதால் சாகுபடி செய்யப்பட்டுள்ள இளம் சம்பா, தாளடி நெற்பயிர்களில் ஆங்காங்கே நுண்ணூட்டசத்து பற்றாக்குறையினால் மஞ்சள் நிறத்தில் காணப்படுகிறது. நெல் உட்பட அனைத்து பயிர்களுக்கும் 16 வகையான ஊட்டச்சத்துக்கள் தேவைப்படுகின்றன. இவற்றில் தழைச்சத்து, மணிச்சத்து, சாம்பல் சத்து ஆகிய மூன்றும் முதன்மை தாவர ஊட்டச்சத்துக்கள் என்றே கூறலாம். பெரும்பாலான சத்துக்களை நெற்பயிர்கள் நீரிலிருந்தும், மண்ணிலிருந்து எடுத்துக் கொள்கிறது. நெற்பயிருக்கு மிக தேவையான தழைச்சத்து, மணிச்சத்து, சாம்பல் சத்து ஆகிய மூன்றும் அடிப்படை என்பதால் இவற்றை நாம் உரங்களுடன் கலந்து பயிர்களுக்கு செலுத்துகிறோம்.

தற்போது தமிழகம் முழுவதும் உள்ள மண் பரிசோதனை மையங்களில் நடத்தப்பட்ட பரிசோதனையில் நுண்ணூட்ட சத்துக்கள் குறைபாடு இருப்பது கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது. இதனால் நெற்பயிரின் மகசூல் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது. அதிக மகசூல் வேண்டி உயர் விளைச்சல் தரும் நெல் ரகங்களை பயன்படுத்துவது, இயற்கை உரங்களை கைவிட்டது, பசுந்தாள் உரம், கம்போஸிட் உரம், தொழுவுரம் போன்றவற்றை பயன்படுத்தாத நிலை, முறையாக பயிர் சுழற்சி செய்யாதது உள்ளிட்டவைகள் நுண்ணூட்ட சத்து குறைபாட்டிற்கான காரணங்களாகும்.

நுண்ணூட்ட சத்து மேலாண்மை

பருவநிலை மாற்றத்தினாலும், மழை வெள்ளம் ஏற்படும் போதும் அதிக அளவிலான மண் நீரில் அடித்து செல்லப்பட்டு மண்ணின் ஊட்டச்சத்தை குறைத்து விடுகிறது. இயற்கை உரங்களான தொழு உரம், கம்போஸ்ட் உரம், பதப்படுத்தப்பட்ட கரும்பு தோகை உரம் என ஏதேனும் ஒன்றை ஆண்டுக்கு ஒரு முறை பயன்படுத்தி வந்தால் ஊட்டச்சத்து குறைபாட்டை நிவர்த்தி செய்யும்.

நடவு வயலில் ஒரு ஏக்கருக்கு 5 கிலோ நெல்நுண்ணூட்ட உரத்தை 20 கிலோ மணல் அல்லது தொழு உரத்துடன் கலந்து மண்பரப்பின் மீது தூவி பின்பு நடவு செய்ய வேண்டும். அல்லது நட்ட 15 முதல் 25 நாட்களுக்குள் தெளிக்கவேண்டும். மேற்கண்டவாறு செய்வதன் மூலம் நெற்பயிரில் ஏற்படும் நுண்ணூட்ட சத்து குறைபாட்டை தவிர்க்கலாம். தேவையான நெல்நுண்ணூட்ட உரங்கள் அனைத்து வேளாண் விரிவாக்க மையங்களிலும் தேவையான அளவு இருப்புவைக்கப்பட்டு வினியோகம் செய்யப்படுகிறது. அருகில் உள்ள வேளாண்மை விரிவாக்கமையத்தை அணுகி பயனடையவும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com