

சென்னை,
தமிழ்நாட்டில் ஒரு மூட்டை அரிசி ரூ.300 முதல் ரூ.600 வரை அதிகரித்து உள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த ஓரிரு மாதமாக அரிசி, பருப்பு விலை அதிகரித்து வருகிறது. அந்த வகையில் அரிசி விலை கிடுகிடுவென உயர்ந்து உள்ளது. ஒரு மூட்டை அரிசி ரூ.300 முதல் ரூ.600 வரை அதிகரித்து உள்ளது.
தமிழகத்தில் சன்ன ரக அரிசி உற்பத்தி போதுமான அளவில் இல்லை. ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, மேற்கு வங்காளம், மராட்டியம் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து, சன்ன ரக நெல் அதிகளவில் தமிழகத்திற்கு வருகிறது. இங்குள்ள அரிசி ஆலைகள் வாயிலாக அது கொள்முதல் செய்யப்பட்டு, அரிசியாக்கி விற்பனை செய்யப்படுகிறது.
உள்ளூர் தேவைக்கு போக வெளிமாநிலங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் அரிசி அனுப்பி வைக்கப்படுகிறது. தற்போது தமிழகம் மட்டுமின்றி, பல்வேறு மாநிலங்களிலும் அரிசி தட்டுப்பாடு அதிகரித்துள்ளது. இதன் காரணமாக விலை கிலோ ரூ.20 முதல் ரூ.40 வரை உயர்ந்துள்ளது. தமிழகத்தில் உள்ள அரிசி ஆலைகளில் நெல் கையிருப்பு குறைந்துள்ளதால், அரிசி விலை மேலும் உயர வாய்ப்புள்ளது. தீபாவளி பண்டிகைக்கு முன் ஒரு கிலோ அரிசி ரூ.100-க்கு விற்கப்பட வாய்ப்புள்ளதாக அரிசி ஆலைகள் தரப்பில் கூறப்படுகிறது.
எனவே, வெளிமாநிலங்களில் இருந்து நெல் கொள்முதலை அதிகரித்து அரிசி ஆலைகளில் சேமித்து வைக்க வேண்டிய அவசியம் எழுந்துள்ளது. ஆனால், ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு வரும் நெல் மூட் டைகளை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்ட நுகர்பொருள் வாணிப கழக அதிகாரிகள், போலீசார் துணையுடன் திருப்பி அனுப்பி வருகின்றனர். இதனால் அரிசி தட்டுப்பாடு ஏற்பட்டு விலை கணிசமாக உயரும் என நெல் வியாபாரிகள், கமிஷன் ஏஜென்டுகள், அரிசி ஆலை உரிமையாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
ரூ.1,400-க்கு விற்பனை செய்யப்பட்ட டீலக்ஸ் பொன்னி தற்போது ரூ.1,800-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ரூ.1,600-க்கு விற்பனை செய்யப்பட்ட பொன்னி அரிசி ரூ.1,950-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ரூ.1,900-க்கு விற்பனை செய்யப்பட்ட வெள்ளை பொன்னி அரிசி ரூ.2,300-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
900 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட இட்லி அரிசி ரூ.1,200-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ரூ.1,500-க்கு விற்பனை செய்யப்பட்ட பச்சரிசி ரூ.1,800-க்கு விற்பனை செய் யப்படுகிறது. அதேபோன்று 25 கிலோ எடை கொண்ட சிவாஜி பொன்னி அரிசி ரூ.1,800-ல் இருந்து ரூ.2,400 ஆக உயர்ந்துள்ளது. 30 கிலோ எடை கொண்ட பாஸ்மதி அரிசி ரூ.3,300-ல் இருந்து ரூ.3,600 ஆக உயர்ந்துள்ளது. அதாவது ஒரு மூட்டை அரிசி ரூ.300 முதல் ரூ.600 வரை அதிகரித்து உள்ளது.