நெல் கொள்முதல் சரிவு; ரேஷன் கடைகளில் அரிசி தட்டுப்பாடு..?

4.50 லட்சம் டன் நெல் மட்டுமே கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.
நெல் கொள்முதல் சரிவு; ரேஷன் கடைகளில் அரிசி தட்டுப்பாடு..?
Published on: 

சென்னை,

நெல் கொள்முதல் சரிவு காரணமாக ரேஷன் கடைகளில் அரிசி தட்டுப்பாடு ஏற்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

தமிழக விவசாயிகளிடம் இருந்து நடப்பு சீசனில் நேற்று வரை 4.50 லட்சம் டன் நெல் மட்டுமே நுகர்பொருள் வாணிப கழகம் கொள்முதல் செய்துள்ளது. இதேநிலை நீடித்தால் ரேஷன் அரிசி விநியோகத்தில் தட்டுப்பாடு ஏற்படும் சூழ்நிலை உருவாகலாம்.

மத்திய அரசின் சார்பில் தமிழக விவசாயிகளிடம் இருந்து நெல் கொள்முதல் செய்யும் பணியை தமிழக அரசின் நுகர்பொருள் வாணிப கழகம் மேற்கொள்கிறது. இதற்காக விவசாயிகளுக்கு மத்திய, மாநில அரசுகளின் சார்பில், குறைந்தபட்ச ஆதரவு விலை வழங்கப்படுகிறது.

இந்த நெல், அரிசியாக மாற்றப்பட்டு ரேஷனில் வழங்கப்படுகிறது. அதன்படி ரேஷன் கடைகளில் 2.25 கோடி அரிசி கார்டுதாரர்களுக்கு மாதந்தோறும் இலவச அரிசி வழங்க சராசரியாக 3.60 லட்சம் டன் அரிசி தேவை.

இதில் முன்னுரிமை மற்றும் அந்தியோதயா கார்டுதாரர்களுக்கு வழங்கப்படும், 2.05 லட்சம் டன் அரிசியை மத்திய அரசு இலவசமாக வழங்குகிறது. மேலும், 92 ஆயிரம் டன் அரிசியை கிலோ, 8.30 ரூபாய் விலையில் வழங்குகிறது. மீதி அரிசியை கிலோ, 22.50 ரூபாய் விலையில் தமிழக அரசு வாங்குகிறது.

10 லட்சம் டன் குறைவு

நடப்பு நெல் கொள்முதல் சீசன் இந்தாண்டு செப்., 1ல் தொடங்கியது. நேற்று முன்தினம் வரை 4.50 லட்சம் டன் நெல் மட்டுமே கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

அதேசமயம், கடந்த சீசனில் இதே காலத்தில், 14.50 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டது. கடந்த சீசனுடன் ஒப்பிடும்போது, இந்த சீசனில் நெல் கொள்முதல் இதுவரை 10 லட்சம் டன் குறைந்துள்ளது.

நேற்றைய நிலவரப்படி, நுகர்பொருள் வாணிப கழக கிடங்குகளில், 7.04 லட்சம் டன் அரிசி இருப்பு உள்ளது.

இரு மாதங்களுக்கான அரிசி மட்டுமே கையிருப்பு உள்ள நிலையில், நெல் கொள்முதலும் குறைந்து வருகிறது.

இதே நிலை நீடித்தால், ரேஷனில் அரிசி விநியோகத்தில் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உருவாகலாம்.

அதேவேளை இதுகுறித்து கூட்டுறவு மற்றும் உணவு துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

மத்திய அரசின் கிடங்குகளில் தமிழகத்திற்கான அரிசி கையிருப்பு அதிகம் உள்ளது. கடந்த சீசனில் கொள்முதல் செய்யப்பட்ட நெல், அரவை ஆலைகளில் அரிசியாக மாற்றப்பட்டு வருகிறது. எனவே, இந்த சீசனில் நெல்வரத்து குறைந்தாலும், ரேஷன் அரிசி விநியோகத்தில் தட்டுப்பாடு ஏற்படாது.

இவ்வாறு அவர் கூறினார்.

X