கல்வி உரிமை சட்டம்: இணையதளப் பக்கம் திறக்காதது ஏன்? - ஐகோர்ட்டு கேள்வி

மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு, கவுரவம் பார்க்காமல் இணையதள பக்கத்தை திறக்க வேண்டுமென தமிழ்நாடு அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
சென்னை,
கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்படி தனியார் பள்ளிகளில் ஏழை மாணவர்களுக்கான 25 சதவீத இட ஒதுக்கீட்டுக்கான மாணவர் சேர்க்கை நடப்பு கல்வியாண்டுக்கு இதுவரை தொடங்கவில்லை என்று சென்னை ஐகோர்ட்டில், மறுமலர்ச்சி இயக்கத்தின் நிர்வாகி ஈஸ்வரன் என்பவர் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, ‘கல்வி உரிமைச் சட்டத்தின் படி மத்திய அரசு உரிய நிதியை தமிழ்நாடு அரசுக்கு ஒதுக்க வேண்டும். மத்திய அரசிடம் இருந்து நிதி கிடைக்கவில்லை என கூறாமல் தனியார் பள்ளிகளுக்கு உரிய நிதியை தமிழ்நாடு அரசு ஒதுக்க வேண்டும்' என்று கடந்த ஜூன் மாதம் உத்தரவிட்டு இருந்தது.
இந்த உத்தரவை அமல்படுத்தவில்லை என பள்ளிக்கல்வித்துறை செயலாளர் சந்திரமோகன், தனியார் பள்ளிகள் இயக்குநர் குப்புசாமி ஆகியோருக்கு எதிராக மனுதாரர் கோர்ட்டு அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்தார். இந்த வழக்கு நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், வி.லட்சுமிநாராயணன் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது, தனியார் பள்ளிகள் இயக்குனர் தாக்கல் செய்த பதில் மனுவில், தேசிய கல்விக்கொள்கையை அமல்படுத்த மறுத்ததால், மத்திய அரசு நிதி ஒதுக்கவில்லை. மாநில அரசு தனது பங்கான 40 சதவீத நிதியை ஒதுக்க தயாராக உள்ள போதும், மத்திய அரசு 60 சதவீத நிதியை ஒதுக்காததால் கட்டாய கல்வி உரிமை சட்டத்தை அமல்படுத்த இயலவில்லை. இந்த ஐகோர்ட்டு உத்தரவை ஒருபோதும் அவமதிக்கவில்லை'' என்று கூறியிருந்தார்.
அரசு தரப்பில் கூடுதல் அட்வகேட் ஜெனரல், ''கல்வி விவகாரத்தில் மத்திய அரசுக்கும் சம பொறுப்பு உள்ளது. இருந்தபோதிலும் மாநில அரசுக்கு எதிராக மட்டுமே கோர்ட்டு அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த ஐகோர்ட்டு உத்தரவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. அந்த வழக்கு வருகிற செப்டம்பர் 7-ந்தேதி விசாரணைக்கு வரவுள்ளது'' என்று வாதிடப்பட்டது.
அதற்கு நீதிபதிகள், ''கல்வியாண்டு தொடங்கி 2 மாதங்கள் கடந்த நிலையில், கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் ஏழை மாணவர்கள் விண்ணப்பிப்பதற்கான இணையதள பக்கத்தை இன்னும் திறக்காமல் இருப்பது ஏன்? மத்திய, மாநில அரசுகளுக்கு இடையில் நிதி ஒதுக்கீடு தொடர்பான பிரச்சினை காரணமாக மாணவர்கள் ஏன் பாதிக்கப்பட வேண்டும்?'' என்று கேள்வி கேட்டனர்.
பின்னர் நீதிபதிகள், ''மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு, கவுரவம் பார்க்காமல் இணையதள பக்கத்தை திறக்க வேண்டும்'' என்று தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்டு, இந்த வழக்கை வருகிற செப்டம்பர் 9-ந்தேதிக்கு நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.






