அமைச்சர் கே.பாண்டியராஜன் மீதான உரிமை பிரச்சினை: சட்டசபையில் இருந்து தி.மு.க. வெளிநடப்பு

அமைச்சர் கே.பாண்டியராஜன் மீதான உரிமை மீறல் பிரச்சினையால் சட்டசபையில் இருந்து தி.மு.க.வினர் வெளிநடப்பு செய்தனர்.
அமைச்சர் கே.பாண்டியராஜன் மீதான உரிமை பிரச்சினை: சட்டசபையில் இருந்து தி.மு.க. வெளிநடப்பு
Published on

சென்னை,

தமிழகத்தில் வாழும் இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்குவது தொடர்பான கருத்துக்காக, அமைச்சர் கே.பாண்டியராஜன் மீது தி.மு.க. உறுப்பினர் தங்கம் தென்னரசு அவை உரிமை மீறல் பிரச்சினையை நேற்று முன்தினம் எழுப்பினார். இதற்கு அமைச்சர் கே.பாண்டியராஜன் விளக்கம் அளித்தார். இந்த விளக்கத்தை ஏற்று, அவர் மீது எந்த உரிமை மீறலும் இல்லை என்று சபாநாயகர் தீர்ப்பளித்தார்.

இருப்பினும் இந்த பிரச்சினை நேற்றும் அவையில் எதிரொலித்தது. சட்டசபையில் நேற்று கேள்வி நேரம் முடிந்த பிறகு தி.மு.க. உறுப்பினர் தங்கம் தென்னரசு எழுந்து, அமைச்சர் கே.பாண்டியராஜன் பேசியதில் மீண்டும் உரிமை மீறல் இருக்கிறது என்று தெரிவித்தார். இதற்கு சபாநாயகர், நான் ஏற்கனவே இதன் மீது தீர்ப்பளித்து விட்டேன். எனவே மேற்கொண்டு அந்த பிரச்சினையை எழுப்ப முடியாது. வேறு பிரச்சினை இருந்தால் பேசுங்கள் என்றார்.

ஆனாலும், இதனை ஏற்க மறுத்து தி.மு.க. உறுப்பினர்கள் எழுந்து நின்று கோஷமிட்டனர். இந்த நேரத்தில் எதிர்க்கட்சி துணைத்தலைவர் துரைமுருகன் தனக்கு பேச வாய்ப்பு அளிக்கும்படி கேட்டுக்கொண்டார். அதன்பின்னர் பேசிய துரைமுருகன், எங்கள் உறுப்பினர் என்ன கேட்கிறார் என்றால், அமைச்சர் பேசியதிலும் உரிமை மீறல் இருக்கிறது, அதை அவையின் கவனத்திற்கு கொண்டு வருவதாக கூறுகிறார். எனவே உரிமை மீறல் குழுவுக்கு இதை அனுப்ப வேண்டும் என்றார்.

இதற்கு சபாநாயகர், இந்த பிரச்சினை முடிந்து விட்டது, நான் தீர்ப்பு வழங்கி விட்டேன். மீண்டும் என்னை வற்புறுத்துவது முறை அல்ல. நீங்கள் அமரலாம் என்றார்.

இதைத்தொடர்ந்து தி.மு.க. உறுப்பினர்கள் அவையில் இருந்து வெளிநடப்பில் ஈடுபட்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com