எத்திலீனை பயன்படுத்தி பழுக்க வைத்த1,766 கிலோ மாம்பழங்கள் அழிப்பு

தூத்துக்குடி, கோவில்பட்டியில் எத்திலீனை பயன்படுத்தி பழுக்க வைத்த 1,766 கிலோ மாம்பழங்கள் அழிக்கப்பட்டது.
எத்திலீனை பயன்படுத்தி பழுக்க வைத்த1,766 கிலோ மாம்பழங்கள் அழிப்பு
Published on

தூத்துக்குடி, கோவில்பட்டியில் எத்திலீனை பயன்படுத்தி பழுக்க வைக்கப்பட்ட 1766 கிலோ மாம்பழங்களை உணவு பாதுகாப்பு அதிகாரிகள் பறிமுதல் செய்து அழித்தனர்.

பறிமுதல்

தமிழ்நாடு உணவு பாதுகாப்பு ஆணையர் லால்வேனா, மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் ஆகியோரின் வழிகாட்டுதலின் பேரில், தூத்துக்குடி உணவு பாதுகாப்பு மாவட்ட நியமன அலுவலர் மாரியப்பன் தலைமையில், உணவு பாதுகாப்பு அலுவலர்கள் சக்தி முருகன், காளிமுத்து, ஜோதி பாசு மற்றும் சிவகுமார் ஆகியோர் அடங்கிய குழுவினர், தூத்துக்குடி மாநகராட்சி மற்றும் கோவில்பட்டி நகராட்சி பகுதிகளில் உள்ள மாம்பழ விற்பனை கடைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அந்த ஆய்வின் போது, தூத்துக்குடி மாவட்டத்தில் கார்பைடு கல் வைத்து எங்கும் மாம்பழங்கள் பழுக்க வைக்கப்படவில்லை என்பது உறுதி செய்யப்பட்டது. அதே நேரத்தில், தூத்துக்குடியில் உள்ள மொத்த பழம் விற்பனை கடையில் 286 கிலோ மாம்பழங்களை அனுமதிக்கப்பட்ட எத்திலீன் கொண்டு, இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் ஆணையரகத்தினால் அனுமதிக்கப்படாத முறையினால், பழுக்க வைக்கப்பட்டது கண்டறியப்பட்டது.

இதனை தொடர்ந்து அந்த மாம்பழங்கள் பறிமுதல் செய்து மாநகராட்சி குப்பை கிடங்கில் கொட்டி அழிக்கப்பட்டது. இதே போன்று கோவில்பட்டியில் உள்ள ஒரு கடையில் அனுமதிக்கப்பட்ட எத்திலீனை நேரடியாக மாம்பழத்தில் தெளித்து பழுக்க வைத்ததால், அங்கு இருந்த 1480 கிலோ மாம்பழங்கள் பறிமுதல் செய்து கோவில்பட்டி நகராட்சி குப்பை கிடங்கில் கொட்டி அழிக்கப்பட்டது.

வியாபாரிகள்

மேலும் வியாபாரிகள் மாம்பழத்தை செயற்கை முறையில் பழுக்க வைக்க விரும்புகிறவர்கள், எத்திலீன் கியாஸ் சேம்பர் மூலமாக தான் பழுக்க வைக்க வேண்டும். எத்திலீன் கியாஸ் சேம்பர் இல்லாத இடங்களில், எத்திலீன் ஸ்பிரே பயன்படுத்தலாம். ஆனால், மாம்பழம் வைக்கப்படும் அறையில் முதலில் எத்திலீன் ஸ்பிரே செய்து, அதன் பின்னர் மாம்பழத்தை சுவற்றிலிருந்து அடி தள்ளியும், அறையின் கொள்ளளவில் 75% வரை வைத்துவிட்டு, அறையை மூடிவிட வேண்டும். அடுத்த 24 மணி நேரம் கழித்து, அந்தக் கதவினைத் திறக்க வேண்டும். இந்த வசதியும் இல்லாத வியாபாரிகள். 'எத்திஃபான்" என்று சொல்லக்கூடிய ஒரு பாக்கெட்டில் வரக்கூடிய செயற்கை பழுக்க வைப்பானை (எத்திலீன் பொடி) 5-10 விநாடிகள் தண்ணீரில் ஊறவைத்து, சிறு துளைகள் உள்ள பிளாஸ்டிக் டப்பாவில் போட்டு, 10 கிலோ மாம்பழம் உள்ள பெட்டியில் வைத்து, அப்பெட்டியை காற்றுப்புகாமல் மூடி வைக்க வேண்டும். அதனை, 24 மணி நேரம் கழித்து அதை திறந்து விடலாம்.

இந்த முறைகளை தவிர எத்திலீனை நேரடியாக மாம்பழங்களில் தெளிப்பது, எத்திலீன் கலந்த தண்ணீரை மாம்பழங்களுடன் சேர்த்து இருப்பு வைப்பது ஆகிய முறைகள் இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் ஆணையரகத்தின் வழிகாட்டுதல்களுக்கு புறம்பானது ஆகும்.

நுகர்வோர்

இதே போன்று நுகர்வோர்கள் நன்கு அறிந்த வியாபாரிகளிடம் மாம்பழம் வாங்க வேண்டும். மாம்பழத்தை வாங்கி வந்தவுடன், ஓடும் தண்ணீரில் நன்கு கழுவ வேண்டும். ஒரு மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்க வேண்டும். அப்படி ஊறவைத்தால், தோல் மேல் இருக்கக்கூடிய எத்திலீன் படிமம் நீங்கிவிடும். நுகர்வோர்கள் இயன்றவரை மாம்பழத்தின் மீது கருப்புத் திட்டுக்கள் இல்லாத பழமாகப் பார்த்து வாங்க வேண்டும்.

மாம்பழத்தை மிருதுவாக அழுத்தினால், சற்று இறுக்கமாக இருக்க வேண்டும். நன்கு அழுந்தினால், அவற்றை வாங்க வேண்டாம். ஒரே மாதிரியாக மஞ்சள் நிறத்தில் அல்லாமல், சிறிது பச்சை நிறமும் இருக்குமாறு மாம்பழத்தைப் பார்த்து வாங்க வேண்டும். மாம்பழத்தை வாங்கி வந்த இரண்டு தினங்களுக்குள், அறை வெப்பநிலையில் வைத்திருந்து, அதனைப் பயன்படுத்தலாம். மாம்பழத்தின் தரங்கள் மற்றும் கடையின் சேவை குறைபாடு குறித்து, நுகர்வோர்கள் புகராளிக்க விரும்பினால், 9444042322 என்ற மாநில உணவு பாதுகாப்புத் துறையின் எண்ணிற்கு புகார் அளிக்கலாம். புகார் அளிப்பவரது ரகசியங்கள் காக்கப்படும் என்று தூத்துக்குடி உணவு பாதுகாப்பு மாவட்ட நியமன அலுவலர் மாரியப்பன் தெரிவித்து உள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com