மூலப்பொருள், டீசல் விலை உயர்வு: 25 ஆயிரம் சிறு, குறு தொழில் நிறுவனங்கள் பாதிப்பு

வார்ப்பட தொழிலுக்கு நிலக்கரி, கியாஸ் ஆகியவை முக்கிய எரிபொருளாக உள்ளன.
மூலப்பொருள், டீசல் விலை உயர்வு: 25 ஆயிரம் சிறு, குறு தொழில் நிறுவனங்கள் பாதிப்பு
Published on

கோவை,

கோவையில் 25 ஆயிரம் சிறு, குறு தொழில் நிறுவனங்கள் உள்ளன. இதன் மூலம் 5 லட்சத்துக்கும் மேலானவர்கள் வேலை வாய்ப்பு பெற்றுள்ளனர். சிறு, குறு தொழில் நிறுவனங்களில் எந்திரங்களுக்கு தேவையான உதிரி பாகங்கள், எந்திர மூடிகள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. வார்ப்பட தொழிலுக்கு நிலக்கரி, கியாஸ் ஆகியவை முக்கிய எரிபொருளாக உள்ளன.

இந்த நிலையில் பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ரூ.9 முதல் ரூ.10 வரை உயர்த்தப்பட்டுள்ளது. இது தவிர கடந்த 15-ந் தேதி முதல் சரக்கு வாகன கட்டணங்கள் 25 சதவீதம் வரை உயர்த்தப்பட்டுள்ளது. சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு தேவையான மூலப்பொருட்களான தாமிரம், அலுமினியம், வெண்கலம் உள்ளிட்ட பல்வேறு பொருட்களின் விலையும் உயர்ந்துள்ளது.

இதுகுறித்து கோவையை சேர்ந்த தொழில் துறையினர் கூறியதாவது:-

மூலப்பொருள் விலை ஏற்றம், மின்சார பிரச்சினை, மின் கட் டண உயர்வு, தொழிலாளர் சம்பள நெருக்கடி, சர்வதேச சந் தையில் உற்பத்தி பொருட்களை விற்க முடியாத நிலை என பல்வேறு பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டுள்ளோம். தற்போது தொழிற்சாலைகளுக்கு 200 லிட்டருக்கு மேல் டீசல் வழங்கக் கூடாது என மத்திய அரசு புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது கவலையளிக்கிறது. இந்த நடவடிக்கை தொழில் துறையை முழுமையாக முடக்கும்.

டீசலை சார்ந்து இயங்கும் பெரிய தொழிற்சாலைகள் மூலம் குறு, சிறு தொழில்கள் வேலைவாய்ப்புகளை பெற்று வருகின்றன. இந்த கட்டுப்பாடுகளால் ஒட்டுமொத்த உற்பத்தி சங்கிலியும் தடைபடும். இத்தகைய சுமைகளால் தொழில்கடனை திருப்பி செலுத்த முடியாத நிலை உருவாகியுள்ளது. வட்டி விகிதங்களையாவது ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் ஏற்கப்படவில்லை.

தொழில் அமைப்புகளின் பிரதிநிதிகளுடன் பேசி, இந்த நெருக்கடிகளுக்கு மத்திய அரசு விரைந்து தீர்வு காண வேண்டும். வணிக கியாஸ் சிலிண்டர் விலை உயர்வு மற்றும் தட்டுப்பாடுக்கு இதுவரை தீர்வு காணப்படவில்லை. வெளிச்சந்தையில் ரூ.8 ஆயிரம் முதல் ரூ.10 ஆயிரம் வரை கொடுத்து சிலிண்டர் வாங்கி தொழில் செய்யும் அளவுக்கு லாபம் இல்லை. இதனால் பல தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற் பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com