ஏகணிவயல் பெரிய ஏரியில் கொட்டப்படும் மருத்துவக்கழிவுகளால் தொற்று நோய் பரவும் அபாயம்

அறந்தாங்கி அருகே ஏகணிவயல் பெரிய ஏரியில் கொட்டப்படும் மருத்துவக்கழிவுகளால் தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.
ஏகணிவயல் பெரிய ஏரியில் கொட்டப்படும் மருத்துவக்கழிவுகளால் தொற்று நோய் பரவும் அபாயம்
Published on

ஏகணிவயல் பெரிய ஏரி

அறந்தாங்கி ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட ஏகணிவயல் ஊராட்சியில் உள்ள புறங்காடு கிராமத்தில் பெரிய ஏரி உள்ளது. இந்த ஏரியில் மருத்துவமனையில் பயன்படுத்தப்பட்ட சிறிஞ்ச் ஊசிகள், காலாவதியான மருந்து, மாத்திரைகள், மருத்துவக்கழிவுகள் கொட்டப்படுகிறது. இதனால் நாளடைவில் ஏரி தண்ணீர் விஷத்தன்மையாகி விடுகிறது.

இதனால் அந்த நீரை பயன்படுத்தும் விவசாயிகள், பொதுமக்கள், ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் கூறியதாவது:-

தொற்று நோய் பரவும் அபாயம்

கல்லணை கால்வாய் பாசனதாரர் விவசாயிகள் ஒருங்கிணைப்பு சங்கத்தலைவர் கொக்குமடை ரமேஷ்:- ஏகணிவயல் பெரிய ஏரியில் பயன்படுத்தப்பட்ட சிறிஞ்சு ஊசிகள் மற்றும் காலாவதியான மருந்து, மாத்திரைகளை இரவு நேரங்களில் சிலர் கொட்டிவிட்டு செல்கிறார்கள். மழைக்காலங்களில் அந்த மருத்துவக்கழிவுகள் தண்ணீரோடு கலந்து விடுவதால் அதனை குடிக்கும் கால்நடைகளுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டு வருகிறது. எனவே ஏரியில் மருத்துவக்கழிவுகளை கொட்டும் நபர்களை கண்டறிந்து அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

450 ஏக்கர் பாசன வசதி

ஆறுமுகம்:- ஏகணிவயல் ஊராட்சியில் உள்ள பெரிய ஏரி மூலம் 450 ஏக்கர் பாசன வசதி பெறுகிறது. இந்த நிலையில் மர்ம ஆசாமிகள் இரவு நேரங்களில் காலாவதியான மருந்து, மாத்திரைகள் மற்றும் மருத்துவக்கழிவுகளை கொட்டிவிட்டு சென்று விடுகிறார்கள். இதனால் அப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் இந்த தண்ணீரை பயன்படுத்தும் விவசாயிகள் மற்றும் கால்நடைகளுக்கு தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே ஏரியில் மருத்துவக்கழிவுகளை கலக்கும் சமூக விரோதிகளை கண்டறிந்து மாவட்ட நிர்வாகம் கடும் தண்டனை வழங்க வேண்டும்.

பயிர்கள் கருகும் அவலம்

ராஜேந்திரன்:- ஏகணிவயல் ஊராட்சியை சேர்ந்த விவசாயிகள் இங்குள்ள ஏரியை நம்பியே நெல், கடலை, எள் உள்ளிட்ட பயிர்களை சாகுபடி செய்து வருகிறோம். இந்தநிலையில் மர்ம ஆசாமிகள் மருத்துவமனைகளில் இருந்து சேகரமாகும் கழிவுகளை ஏகணிவயல் பெரிய ஏரியில் இரவு நேரங்களில் கொட்டிவிட்டு சென்று விடுகிறார்கள். இதனை தற்போது தான் நாங்கள் கண்டுபிடித்துள்ளோம். இந்த மருத்துவக்கழிவுகளால் பயிர்கள் கருகும் அவலம் ஏற்பட்டுள்ளது. மேலும் இந்த தண்ணீரை குடிக்கும் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கால்நடைகளுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே ஊராட்சி நிர்வாகமும், மாவட்ட நிர்வாகமும் இந்த பிரச்சினையில் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கால்நடைகளுக்கு சிகிச்சை

முத்துசெல்வம்:- ஏகணிவயல் பெரிய ஏரியில் கொட்டப்பட்டுள்ள மருத்துவக்கழிவுகளை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் பார்வையிட்டு அதனை அகற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் கால்நடைகளுக்கு பாதிப்பு ஏற்படாமல் இருக்க அவற்றுக்கு சிகிச்சை அளிப்பதுடன், மருத்துவக்கழிவுகளை ஏரியில் கொட்டி சென்ற மர்ம ஆசாமிகளை கண்டறிந்து அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com