வாய்க்கால் மதகு அருகே மண் அரிப்பால் சாலை துண்டிக்கப்படும் அபாயம்

வலங்கைமான் அடுத்த மருவத்தூர் ஊராட்சியில் வாய்க்கால் மதகு அருகே ஏற்பட்டுள்ள மண் அரிப்பால் சாலை துண்டிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. உடனே தடுப்புச்சுவர் கட்டித்தர வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வாய்க்கால் மதகு அருகே மண் அரிப்பால் சாலை துண்டிக்கப்படும் அபாயம்
Published on

வலங்கைமான்:

வலங்கைமான் அடுத்த மருவத்தூர் ஊராட்சியில் வாய்க்கால் மதகு அருகே ஏற்பட்டுள்ள மண் அரிப்பால் சாலை துண்டிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. உடனே தடுப்புச்சுவர் கட்டித்தர வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பாசன வாய்க்கால்

வலங்கைமானை அடுத்த மருவத்தூர் ஊராட்சி கிராமம் முற்றிலும் விவசாயம் சார்ந்த பகுதியாகும். இந்த கிராமத்தில் சுமார் 500-க்கும் மேற்பட்ட விவசாயிகள் மற்றும் விவசாய தொழிலாளர்கள் உள்ளிட்ட பலரும் வசித்து வருகின்றனர். மேலும் வலங்கைமான்-அரித்துவார மங்கலம் சாலையில் ஊராட்சி மன்ற அலுவலகம் எதிரே மருவத்தூர் கிராமத்தின் பிரதான பாசன வாய்க்கால் உள்ளது.

இந்த வாய்க்காலில் இருந்து தற்போது கிளை வாய்க்கால்களுக்கும், விவசாய நிலங்களுக்கும் தண்ணீர் வினியோகிக்கும் வகையில் அந்த சாலையில் உள்ள பாலத்தின் அருகே திருகு மதகு கட்டப்பட்டது.

மண் அரிப்பு

ஆனால் திருகு மதகு கட்டப்பட்ட இடத்தில் சாலையோரத்தில் தடுப்புச்சுவர் இல்லாமல் உள்ளது. இதனால் அந்த பாலத்தின் வழியாக வரக்கூடிய தண்ணீரால் மண் அரிப்பு அதிக அளவு ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த பிரதான சாலையில் மண் சரிவு ஏற்பட்டு உள்ளது.

மேலும் அதிகளவு தண்ணீர் மற்றும் மழை வெள்ள காலங்களில் கூடுதல் மண் அரிப்பு ஏற்பட்டால் இந்த சாலை போக்குவரத்திற்கு தடை ஏற்படும் வகையில் முற்றிலுமாக துண்டிக்கப்படும் அபாயம் உள்ளது.

தடுப்புச்சுவர் கட்ட வேண்டும்

இந்த சாலை வழியாகத்தான் நேரடி நெல் கொள்முதல் நிலையத்துக்கு சென்றுவரக்கூடிய விவசாயிகள் மற்றும் பள்ளி, கல்லூரி வாகனங்கள், இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் மற்றும் அரசு பஸ்கள், டிராக்டர் உள்ளிட்ட வாகனங்கள் அதிகளவு சென்று வருகின்றன.

எனவே இதை கருத்தில்கொண்டு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட சாலையில் பாலத்தின் அருகில் உள்ள திருகு மதகை ஆய்வு செய்து, அதன் அருகில் மண் அரிப்பு ஏற்படாதவாறு தடுப்புச்சுவர் கட்டித்தர வேண்டும் என்று அப்பகுதி விவசாயிகள், வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com