ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் பணப்பட்டுவாடா: சி.பி.ஐ. விசாரணை கேட்கும் தி.மு.க. மனுவுக்கு பதில் அளிக்க வேண்டும் - தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவு

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் பணப்பட்டுவாடா குற்றச்சாட்டு தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை கேட்கும் தி.மு.க. மனுவுக்கு தமிழக அரசு பதில் அளிக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் பணப்பட்டுவாடா: சி.பி.ஐ. விசாரணை கேட்கும் தி.மு.க. மனுவுக்கு பதில் அளிக்க வேண்டும் - தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவு
Published on

சென்னை,

சென்னை ஆர்.கே.நகர் சட்டசபை தொகுதியில் கடந்த 2017-ம் ஆண்டு நடைபெற இருந்த இடைத்தேர்தலில் டி.டி.வி. தினகரனுக்கு ஆதரவாக முதல்-அமைச்சர், அமைச்சர்கள் செயல்பட்டனர். வாக்காளர்களுக்குபணப் பட்டுவாடா செய்ததாக இவர்கள் மீது புகார் எழுந்தது.

அதையடுத்து சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் வீடு மற்றும் அவருக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். அதில் ரூ.89 கோடி வாக்காளர்களுக்கு பட்டுவாடா செய்யப்பட்டதற்கான ஆவணங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அதையடுத்து அந்த தேர்தல் அறிவிப்பு ரத்துசெய்யப்பட்டது.

இந்த தேர்தலில் பணப்பட்டுவாடா முறைகேடு தொடர்பாக தேர்தல் அதிகாரி அளித்த புகாரின்பேரில் அபிராமபுரம் போலீசார் பதிவு செய்த வழக்கு, ஐகோர்ட்டு உத்தரவுப்படி ரத்துசெய்யப்பட்டது.

இதற்கிடையில், தேர்தல் பணப்பட்டுவாடா முறைகேடு தொடர்பான வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றக்கோரி தி.மு.க. சார்பில் போட்டியிட்டு தோல்வியடைந்த மருதுகணேஷ் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அந்த மனுவில், வரும் காலங்களில் தேர்தலில் பணப்பட்டுவாடாவை தடுக்க புதிய விதிகளை உருவாக்க இந்திய தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும் என்றும் கூறியிருந்தார்.

இந்த வழக்கை நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், ஆர்.ஹேமலதா ஆகியோர் விசாரித்து வருகின்றனர். இந்த வழக்கு நீதிபதிகள் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு சார்பில் மாநில அரசு பிளடர் வி.ஜெயபிரகாஷ் நாராயணன், இந்திய தேர்தல் ஆணையம் சார்பில் வக்கீல் நிரஞ்சன், மனுதாரர் சார்பில் வக்கீல் ஆர்.நீலகண்டன் ஆகியோர் ஆஜராகி வாதிட்டனர்.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள், சி.பி.ஐ., விசாரணை கேட்கும் மனு குறித்து தமிழக தலைமைச்செயலாளர், டி.ஜி.பி., அபிராமபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆகியோர் பதில் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர். விசாரணையை வருகிற மார்ச் 12-ந்தேதிக்கு தள்ளிவைத்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com