‘‘ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை மீண்டும் ரத்து செய்யலாம்’’

பணப்பட்டுவாடாவை முழுமையாக தடுக்க முடியாவிட்டால், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை மீண்டும் ரத்து செய்யலாம் என்று தமிழக பா.ஜ.க.வின் தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் பேசியுள்ளார்.
‘‘ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை மீண்டும் ரத்து செய்யலாம்’’
Published on

சென்னை,

ஆர்.கே.நகர் தொகுதியில் பா.ஜ.க. வேட்பாளராக போட்டியிடும் கரு.நாகராஜன் தினமும் தொகுதி மக்களிடம் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். இந்தநிலையில் நேற்று தண்டையார்பேட்டை குமரன்நகரில் வேட்பாளர் கரு.நாகராஜன் பிரசாரத்தில் ஈடுபட்டார். அவருக்கு ஆதரவாக தமிழக பா.ஜ.க. தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் தாமரை சின்னத்தில் பொதுமக்களிடம் வாக்குச் சேகரித்தார்.

திராவிட கட்சிகள் மீதான ஊழல் வழக்குகளின் தீர்ப்பு கோர்ட்டில் விரைவில் வர உள்ளன. எல்லா தீர்ப்புகளுமே அவர்களுக்கு எதிராக அமையப் போகிறது. ஆனால் மக்களின் தீர்ப்பு பா.ஜ.க.வுக்கு மட்டுமே இருக்கப் போகிறது. குஜராத் மாநில தேர்தலில் பா.ஜ.க. வெற்றி பெற போவது உறுதி. அந்த வெற்றி ஆர்.கே.நகரிலும் தொடரப்போவது உறுதி. இன்றைக்கு எல்லா கட்சிகளும் பா.ஜ.க.வை குறிவைத்து விமர்சனம் செய்கிறார்கள். தாமரையின் பலத்தை பார்த்து எதிரணியினர் பயப்படுகிறார்கள். குறுக்குவழியில் எதையும் சாதிக்க வேண்டிய அவசியம் இல்லை.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பணப்பட்டுவாடா பெரிய அளவில் நடந்து வருகிறது. நான் தேர்தல் ஆணையத்திற்கு விடுக்கும் வேண்டுகோள் பணப்பட்டுவாடாவை தடுத்து நிறுத்தி, நியாயமான முறையில் நடத்த முடிந்தால் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை நடத்துங்கள். இல்லையென்றால் தேர்தலை மீண்டும் ரத்து செய்யுங்கள். இதுவரை ரூ.6 லட்சம் பணத்தை தேர்தல் அதிகாரிகள் பறிமுதல் செய்யததாக கூறுகிறார்கள். ஆனால் இங்கு நிமிடத்திற்கு பல லட்சம் ரூபாய் பட்டுவாடா செய்யப்பட்டு வருகிறது. எனவே இந்த மோசமான கலாசாரம் மாற வேண்டும். பா.ஜ.க. மீது தற்போது பொதுமக்களின் பார்வை பதியத் தொடங்கியிருக்கிறது. இது புரிதலாக மாறும்போது பா.ஜ.க.விற்கு வெற்றி உறுதி. இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com