

திருமங்கலம்,
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே நான்கு வழிச்சாலையை கடக்க முயன்ற ஐஸ் வியாபாரி மீது கார் மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே வடுகபட்டி காலனியை சேர்ந்தவர் அழகுபாண்டி (41). ஐஸ் விற்பனை தொழில் செய்து வந்த இவருக்கு, மனைவி பெருமாள் செல்வி மற்றும் 3 மகன்கள் உள்ளனர். சம்பவத்தன்று குலசேகரப்பட்டினம் செல்வதற்காக திருமங்கலம் வந்திருந்தார்.
அப்போது தனது நண்பரை அழைத்துச் செல்வதற்காக, திருமங்கலம் மறவன்குளம் பகுதியில் உள்ள மெட்டல் பவுடர் நிறுவனம் எதிரே நான்கு வழிச்சாலையை கடக்க முயன்றார்.
அப்போது விருதுநகரில் இருந்து திண்டுக்கல் நோக்கி வேகமாக வந்த கார், எதிர்பாராதவிதமாக அழகுபாண்டி மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவல் அறிந்த திருமங்கலம் நகர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து தொடர்பாக திருமங்கலம் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.