ஓசூர் அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்ட கர்ப்பிணி சாவு உறவினர்கள் சாலை மறியல்

ஓசூர் அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்ட கர்ப்பிணி இறந்தது குறித்து கேட்ட போது வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
ஓசூர் அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்ட கர்ப்பிணி சாவு உறவினர்கள் சாலை மறியல்
Published on

ஓசூர்:

ஓசூர் அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்ட கர்ப்பிணி இறந்தது குறித்து கேட்ட போது வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

கர்ப்பிணிக்கு அறுவை சிகிச்சை

ஓசூர் அண்ணா நகர் பகுதியை சேர்ந்தவர் கார்த்திக். தனியார் நிறுவன ஊழியர். இவரது மனைவி காவியா (வயது21). இவர்களுக்கு கடந்த 3 வருடத்திற்கு முன்பு திருமணம் நடைபெற்றது. கர்ப்பிணியாக இருந்த காவியா கடந்த 10-ந் தேதி ஓசூர் அரசு மருத்துவமனையில் பிரசவத்திற்காக சேர்க்கப்பட்டார். மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மூலம் அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது.

இந்த நிலையில் மீண்டும் அதே நாளில், 2-வது முறையாக அறுவை சிகிச்சை செய்து அவரது கர்ப்பப்பை அகற்றப்பட்டதாக கூறப்படுகிறது இதையடுத்து, தொடர்ந்து ரத்தக்கசிவு ஏற்பட்டதால் காவியா மேல் சிகிச்சைக்காக பெங்களூரு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆனால், அங்கு சிகிச்சை பலன் இன்றி அவர் உயிரிழந்தார்.

சாலை மறியல்

இதையடுத்து, காவியாவின் உறவினர்கள் நேற்று ஓசூர் அரசு மருத்துவமனைக்கு வந்து தலைமை மருத்துவ அலுவலர் ஞானமீனாட்சியிடம் நடந்த சம்பவம் குறித்து கூறி சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். அப்போது மருத்துவமனை ஊழியர் ஒருவர் கார்த்திக்கின் உறவினர்களை ஒருமையில் பேசியதாக கூறப்படுகிறது. இதனால் மருத்துவமனை ஊழியர்கள் மற்றும் காவியாவின் உறவினர்களிடையே வாக்குவாதம் மற்றும் கைகலப்பு ஏற்பட்டது.

இதனால் ஆத்திரமடைந்த காவியாவின் உறவினர்கள் அரசு மருத்துவமனை முன்பு சாலையில் அமர்ந்து, திடீரென மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு உதவி போலீஸ் சூப்பிரண்டு அரவிந்த் தலைமையில் போலீசார் விரைந்து வந்தனர். அவர்கள், மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து அவர்கள் மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த மறியல் காரணமாக, அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com