மேஜர் முகுந்த் வரதராஜன் பெயரில் சாலை அறிவிப்பு!

`அமரன்' திரைப்படம் இவரது வாழ்க்கை வரலாற்றை தழுவி எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மேஜர் முகுந்த் வரதராஜன்
Published on

சென்னை,

ராணுவ பணியில் வீர மரணம் அடைந்த மேஜர் முகுந்த் வரதராஜனை போற்றும் வகையில், தாம்பரம் ரயில் நிலையத்திலிருந்து வேளச்சேரி வரை செல்லும் சாலைக்கு அவரது பெயர் வைக்கப்படும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

கோரிக்கை

கடந்த ஆண்டு இதற்காக மாநகராட்சிக்கு அனுப்பப்பட்ட கோரிக்கையை தொடர்ந்து, தாம்பரம் மாநகராட்சி கூட்டத்தில் பெயர் மாற்ற தீர்மானம் கொண்டுவரப்பட்டது. அனைத்து உறுப்பினர்களின் ஆதரவுடன் இது ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.

உயிரை தியாகம் செய்த மேஜர் முகுந்த்

தேச பாதுகாப்புக்காக தனது உயிரை தியாகம் செய்த மேஜர் முகுந்த் வரதராஜனின் வீரத்தையும் சேவையையும் நினைவுகூரும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.மேலும் மேஜர் முகுந்த் வரதராஜனின் வீடு, கிழக்கு தாம்பரத்தில் உள்ளது. அவரது வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு வெளியான ‘அமரன்’ திரைப்படம் கூட மக்கள் மத்தியில் அவரது வீரத்தை மீண்டும் நினைவுபடுத்தியது குறிப்பிடத்தக்கது.

'அசோக் சக்ரா'

ஏப்ரல் 25, 2014 - ஜம்மு காஷ்மீரின் சோபியான் மாவட்டத்தில் நடைபெற்ற தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கையின் போது, மூன்று பயங்கரவாதிகளை சுட்டு வீழ்த்திவிட்டு வீரமரணம் அடைந்தார். மேஜர் முகுந்த் வரதராஜனின் அசாத்திய தைரியத்தையும் தியாகத்தையும் பாராட்டி, இந்திய ராணுவத்தின் உயரிய விருதான 'அசோக் சக்ரா'வை மத்திய அரசு வழங்கி கௌரவித்தது.

X

Daily Thanthi
www.dailythanthi.com