27 ஆயிரம் பள்ளி மாணவ-மாணவிகளுடன் சாலை பாதுகாப்பு ரோந்து படை

சென்னையில் 27 ஆயிரம் பள்ளி மாணவ-மாணவிகளுடன் சாலை பாதுகாப்பு ரோந்து படை அமைப்பை புதுப்பொலிவுடன் போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் தொடங்கி வைத்தார்.
27 ஆயிரம் பள்ளி மாணவ-மாணவிகளுடன் சாலை பாதுகாப்பு ரோந்து படை
Published on

சென்னை,

சென்னையில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்த போக்குவரத்து போலீசுக்கு உதவி கரமாக போக்குவரத்து வார்டன்கள் என்ற அமைப்பு செயல்படுகிறது. இந்த அமைப்பு ஒரு தன்னார்வ தொண்டு அமைப்பு ஆகும். இதில் பணி செய்பவர்களுக்கு சம்பளம் கிடையாது. கவுரவமான அமைப்பு. ஆனால் போலீசாரை போன்ற காக்கி சீருடை இவர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது.

இந்த வார்டன் அமைப்பு ஆர்.எஸ்.பி. எனப்படும் சாலை பாதுகாப்பு ரோந்து படை என்ற அமைப்பை ஏற்கனவே தொடங்கி சென்னை போக்குவரத்து போலீசுடன் இணைந்து செயல்பட்டு வந்தது. பள்ளி மாணவ-மாணவிகள் இதில் உறுப்பினர்களாக உள்ளனர். 7-ம் வகுப்புக்கு மேல் படிக்கும் மாணவ-மாணவிகள் இதில் உறுப்பினர்களாக இருக்க தகுதி படைத்தவர்கள். தூய வெள்ளை சீருடை மற்றும் பிரவுன் கலர் தொப்பி இவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

இந்த ஆர்.எஸ்.பி.படை மாணவ-மாணவிகள் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபடுவார்கள். இவர்களுக்கு முறையான பயிற்சி கொடுக்கப்பட்டுள்ளது. இந்த ஆர்.எஸ்.பி. அமைப்பு கொரோனா காலத்தில் மூடப்பட்டு விட்டது.

தற்போது ஆர்.எஸ்.பி.அமைப்பு மீண்டும் புதுப்பொலிவுடன் சென்னை போக்குவரத்து போலீஸ் மற்றும் போக்குவரத்து வார்டன் அமைப்பால் தொடங்கப்பட்டுள்ளது. அதில் 354 பள்ளிகளில் இருந்து 27 ஆயிரம் மாணவ-மாணவிகள் உறுப்பினர்களாக உள்ளனர். புதுப்பொலிவுடன் ஆர்.எஸ்.பி. அமைப்பின் தொடக்க விழா நேற்று காலை சென்னை எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டு மைதானத்தில் நடந்தது. 150 பள்ளிகளில் இருந்து 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் இந்த விழாவில் கலந்து கொண்டனர்.

ஆர்.எஸ்.பி.அமைப்பின் செயல்பாட்டை போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் முறைப்படி தொடங்கி வைத்தார். ஆர்.எஸ்.பி. மாணவ-மாணவிகள் கமிஷனர் முன்னிலையில் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

இது போன்ற தன்னார்வ பெரிய அமைப்பு உலகத்தில் மட்டும் அல்ல, இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் அதுவும் சென்னையில்தான் உள்ளது, என்று கமிஷனர் சந்தீப்ராய்ரத்தோர் பேசும்போது குறிப்பிட்டார். இதில் உறுப்பினர்களாக உள்ள மாணவ-மாணவிகள் தங்கள் பெற்றோர்கள், உறவினர்கள், நண்பர்களிடம் போக்குவரத்து விதிகளை கடைபிடிக்க எடுத்துரைக்க வேண்டும், என்றும் கமிஷனர் கேட்டுக்கொண்டார்.

ஆர்.எஸ்.பி. அமைப்பில் சிறந்து விளங்கும் மாணவ-மாணவிகள் மற்றும் உறுதுணையாக செயல்படும் ஆசிரியர்களுக்கு போலீஸ் கமிஷனர் பரிசுகள் மற்றும் சான்றிதழ்களை வழங்கினார். விழாவில் போக்குவரத்து போலீஸ் கூடுதல் கமிஷனர் கபில்குமார் சி சரத்கர், இணை கமிஷனர் மயில்வாகனன், துணை கமிஷனர்கள் சரவணன், தேஷ்முக்சேகர் சஞ்சய் மற்றும் போக்குவரத்து தலைமை வார்டன் ஹரீஸ் எல் மேத்தா உள்ளிட்ட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com