காதல் திருமணம் செய்த பெண்ணின் உறவினர்கள் தாக்குவதாக மத்தூர் போலீஸ் நிலையம் முன்பு காதலனின் உறவினர்கள் சாலை மறியல்

காதல் திருமணம் செய்த பெண்ணின் உறவினர்கள் தாக்குவதாக மத்தூர் போலீஸ் நிலையம் முன்பு காதலனின் உறவினர்கள் சாலை மறியல்
Published on

மத்தூர் 

காதல் திருமணம் செய்த பெண்ணின் உறவினர்கள் தாக்குவதாக கூறி, காதலனின் உறவினர்கள் மத்தூர் போலீஸ் நிலையம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர்.

காதல் திருமணம்

கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அருகே உள்ள ஒட்டப்பட்டியை சேர்ந்தவர் வேலாயுதம். இவரது மகள் விஜயசாந்தி (வயது23). அதே கிராமத்தை சேர்ந்த மாது. இவரது மகன் பூவரசன் (28). இவர்கள் 2 பேரும் காதலித்து வந்தனர். இதனிடையே காதலர்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறி கோவிலில் திருமணம் செய்து கொண்டனர்.

பின்னர் அவர்கள் பாதுகாப்பு வழங்க கோரி ஊத்தங்கரை துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் தஞ்சம் அடைந்தனர். காதலர்கள் திருமண வயதை அடைந்ததால் போலீசார் அவர்களுக்கு அறிவுரை வழங்கி பெற்றோருடன் அனுப்பி வைத்தனர். இதனிடையே விஜயசாந்தியின் உறவினர்கள் பூவரசனின் உறவினர்களை தாக்கியும், அச்சுறுத்தியும் வந்ததாக கூறப்படுகிறது.

சாலை மறியல்

இதுகுறித்து மத்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து நேற்று மத்தூர் போலீஸ் நிலையத்திற்கு வந்த பூவரசனின் உறவினர்கள் தங்களை தாக்குபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி திடீரென போலீஸ் நிலையம் முன்பு சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் மற்றும் போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக அவர்கள் உறுதி அளித்தனர். இதையடுத்து அவர்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com