100 நாள் வேலையில் முழு சம்பளம் வழங்ககோரிநாச்சினாம்பட்டியில் பெண்கள் திடீர் சாலை மறியல்அதிகாரிகள் பேச்சுவார்த்தை

100 நாள் வேலையில் முழு சம்பளம் வழங்ககோரிநாச்சினாம்பட்டியில் பெண்கள் திடீர் சாலை மறியல்அதிகாரிகள் பேச்சுவார்த்தை
Published on

அரூர்:

அரூர் அருகே 100 நாள் வேலை திட்டத்தில் முழு சம்பளம் வழங்ககோரி பெண்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.

முழு சம்பளம்

தர்மபுரி மாவட்டம் அரூர் அடுத்த தொட்டம்பட்டி ஊராட்சிக்குட்பட்ட நாச்சினாம்பட்டியை சேர்ந்த 150-க்கும் மேற்பட்ட பெண்கள் 100 நாள் வேலை உறுதி திட்டத்தில் பணி செய்து வருகின்றனர். அவர்களுக்கு சமீபகாலமாக முழு சம்பளம் வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிகிறது.

இதனால் ஆத்திரம் அடைந்த 100-க்கும் மேற்பட்ட 100 நாள் வேலை உறுதிட்ட பெண்கள் அரூர்- சேலம் சாலையில் நாச்சினாம்பட்டி பஸ் நிறுத்தத்தில் திரண்டனர். பின்னர் தங்களுக்கு வேலையில் முழு சம்பளம் வழங்ககோரி சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

பேச்சுவார்த்தை

இதுகுறித்து அவர்கள் கூறுகையில், 100 நாள் வேலை திட்டத்தில் பணி செய்யும் தொழிலாளர்களுக்கு நாள் ஒன்றுக்கு 283 ரூபாய் சம்பளம் நிர்ணயம் செய்யப்பட்டிருந்தாலும், கடந்த 4 மாதங்களாக நாள் ஒன்றுக்கு 100 ரூபாய் என மட்டுமே தரப்படுகிறது.

இதுகுறித்து ஊராட்சி தலைவர் மற்றும் அதிகாரிகளிடம் முறையிட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் மறியலில் ஈடுபட்டோம் என்றனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற அரூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்கர்பாபு, வருவாய் மற்றும் ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் மறியலில் ஈடுபட்ட பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் சமாதானம் அடைந்த பெண்கள் மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த மறியலால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com