வேளச்சேரியில் போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த சாலையோர ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்

வேளச்சேரியில் போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த சாலையோர ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றப்பட்டன.
வேளச்சேரியில் போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த சாலையோர ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்
Published on

சென்னை வேளச்சேரி விஜயநகர் பகுதியில் இருந்து தரமணி நோக்கி செல்லும் 100 அடி சாலையில், சாலையை ஆக்கிரமித்து கடைகள் அமைக்கப்பட்டு உள்ளதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாக போக்குவரத்து போலீசாருக்கு புகார்கள் வந்தன.

இதையடுத்து சென்னை தெற்கு போக்குவரத்து துணை கமிஷனர் மகேஷ்குமார், அடையாறு போலீஸ் துணை கமிஷனர் பொன் கார்த்திக் ஆகியோர் தலைமையில் போக்குவரத்து போலீசார், மாநகராட்சி ஊழியர்கள் இணைந்து வேளச்சேரி விஜயநகரில் இருந்து தரமணி வரை 100 அடி சாலையில் நடைபாதையை ஆக்கிரமித்து வைக்கப்பட்டு இருந்த தள்ளு வண்டிகள், பெட்டி கடைகள் என 50-க்கும் மேற்பட்ட கடைகள் அகற்றப்பட்டன. மேலும் நடைபாதையை ஆக்கிரமித்து வைக்கப்பட்டு இருந்த மரப்பலகைகளும் அப்புறப்படுத்தப்பட்டன.

இதேபோல் தென் மண்டல போக்குவரத்து துணை கமிஷனர் மகேஷ் குமார் தலைமையில் உதவி கமிஷனர் ராஜா தலைமையிலான போக்குவரத்து போலீசார் நெடுஞ்சாலை துறை ஊழியர்களுடன் சேர்ந்து கோயம்பேடு 100 அடி சாலை, அண்ணா வளைவு முதல் அரும்பாக்கம் வரையிலான பூந்தமல்லி நெடுஞ்சாலை உள்ளிட்ட பகுதிகளில் நடைபாதை மற்றும் சாலையை ஆக்கிரமித்து வைத்திருந்த வியாபாரிகளை எச்சரித்தனர்.

மேலும் சாலையை ஆக்கிரமித்து கடைகளின் முன்புறம் வைத்திருந்த பொருட்களையும் அகற்றினர்.

சென்னை வண்ணாரப்பேட்டை சிமெண்ட்ரி சாலையின் இருபுறமும் ஜவுளி, ரெடிமேட் ஆடைகள் என மொத்தம் மற்றும் சில்லறை விற்பனை கடைகள் அதிக அளவில் உள்ளன. இதனால் பண்டிகை காலங்களில் மட்டுமின்றி எந்நேரமும் குறைந்த விலைகள் துணிகள் வாங்க இங்கு அதிகளவில் பொதுமக்கள் வந்து செல்வார்கள்.

தற்போது தீபாவளி பண்டிகை நெருங்குவதால் பலர் சாலையோரம் நடைபாதையை ஆக்கிரமித்து கடை அமைத்துள்ளனர். இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாக மாநகராட்சிக்கு புகார்கள் வந்தது.

இதையடுத்து ராயபுரம் மண்டலம் 51-வது வார்டு பொறியாளர் மோத்திராம் தலைமையில் மாநகராட்சி ஊழியர்கள் சாலையின் இருபுறமும் எல்லை வகுத்து கயிறு கட்டினர். அந்த கயிறுக்கு வெளியே கடை அமைக்க கூடாது என அதிகாரிகள் அறிவுறுத்தினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளுடன் சாலையோர வியாபாரிகள வாக்குவாதம் செய்தனர்.

இதனால் அங்கு வண்ணாரப்பேட்டை மற்றும் ராயபுரம் போலீசார் குவிக்கப்பட்டனர். பின்னர் போலீஸ் பாதுகாப்புடன் சாலையின் இருபுறமும் எல்லை கயிறு கட்டிய அதிகாரிகள், அதை மீறி கடை அமைத்தால் சம்பந்தப்பட்ட வியாபாரிகளுக்கு அபராதம் விதிக்கப்படும் என எச்சரித்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com