தாம்பரம் அருகே திருட்டு வழக்கில் கொள்ளையன் கைது- கொள்ளையடித்த பணத்தில் வீடு கட்டி சொகுசு வாழ்க்கை

தாம்பரம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 40 பவுன் நகை திருடிய வழக்கில் கொள்ளையனை போலீசார் கைது செய்தனர்
தாம்பரம்,
சென்னை தாம்பரம் அடுத்த முடிச்சூர் லிங்கம் நகர் பகுதியில் வசித்து வருபவர் பாலாஜி (வயது 42). இவரது மனைவி மகேஸ்வரி (39). இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. சிறப்பு குழந்தை என்பதால் மகேஸ்வரி, தினமும் குழந்தையை பெருங்களத்தூர் பகுதியில் உள்ள டியூஷன் சென்டரில் கையெழுத்து பயிற்சிக்கு அழைத்து சென்றுவிட்டு காத்திருந்து வீட்டுக்கு அழைத்து வருவது வழக்கம். அதன்படி அவர் குழந்தையுடன் சென்றிருந்தபோது, பட்டப்பகலில் அவரது வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்மநபர்கள் பீரோவில் இருந்த 40 பவுன் நகை, ரூ.1½ லட்சம் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றுவிட்டனர். இதுபற்றி பீர்க்கன்காரணை போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வந்தனர்.
இது தொடர்பாக 30-க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்த போலீசார், கொள்ளையன் வந்து சென்ற மோட்டார்சைக்கிளின் பதிவு எண்ணை வைத்து அவர், விருதுநகர் மாவட்டம் தளவாய்புரத்தை சேர்ந்த பிரபா என்ற பிரபாகரன் (42) என்பதை கண்டுபிடித்தனர். தனிப்படை போலீசார் விருதுநகர் சென்று பிரபாகரனை கைது செய்து விசாரித்தனர். திருச்சியில் உள்ள ஒரு வீட்டில் 7 பவுன் நகையை திருடிய பிரபாகரன், அதை விற்று ஒரு மோட்டார்சைக்கிளை வாங்கினார். பின்னர் அதில் திருச்சியில் இருந்து சென்னை வந்த அவர், முடிச்சூர் பகுதியில் மகேஸ்வரி வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளையடித்துள்ளார்.
பின்னர் செங்கல்பட்டு அருகே ஓட்டலில் அறை எடுத்து தங்கி, அவற்றை அடகு வைத்ததாகவும், அந்த பணத்தை தனக்கு கடன் கொடுத்தவர்களின் வீட்டுக்கே சென்று திருப்பி கொடுத்துவிட்டதாகவும் போலீசாரிடம் தெரிவித்தார். அவரிடம் போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை செய்தபோது, அவர் கடந்த 10 வருடங்களாக தனியாக இதுபோல் திருட்டில் ஈடுபட்டு வந்ததும், கொள்ளையடித்த நகைகளை விற்று அந்த பணத்தில் ஒரு கிரவுண்ட் இடம் வாங்கி, வீடு கட்டி சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்ததும் தெரியவந்தது. அவரிடம் இருந்து 40 பவுன் நகையை பறிமுதல் செய்த போலீசார், கைதான பிரபாகரனை சிறையில் அடைத்தனர்.






