வீடு புகுந்து பெண்ணிடம் சில்மிஷம்... திருட வந்த இடத்தில் தன்னிலை மறந்த கொள்ளையன்

கொள்ளையடிக்க சென்ற போது வீட்டில் தூங்கி கொண்டிருந்த பெண்ணிடம் சில்மிஷம் செய்த கொள்ளையனை போலீசார் கைது செய்தனர்.
வீடு புகுந்து பெண்ணிடம் சில்மிஷம்... திருட வந்த இடத்தில் தன்னிலை மறந்த கொள்ளையன்
Published on

கன்னியாகுமரி,

குமரி மாவட்டம் குளச்சல் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த மீனவர் ஒருவர் சம்பவத்தன்று இரவு வேலைக்கு சென்றிருந்தார். இதனால் வீட்டில் அவரது 36 வயதுடைய மனைவி மட்டும் தனியாக தூங்கி கொண்டிருந்தார். அப்போது அதிகாலையில் ஒரு வாலிபர் வீட்டின் மேல்மாடி கதவின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்தார். அவர் வீட்டின் அறையில் உள்ள பீரோவை திறந்து பணம், நகை ஏதாவது இருக்கிறதா? என பார்த்தார். ஆனால், அதில் விலை உயர்ந்த பொருட்கள் எதுவும் இல்லாததால் ஏமாற்றம் அடைந்தார்.

தொடர்ந்து அந்த வாலிபர் மற்றொரு அறையில் நுழைந்த போது அங்கு மீனவரின் மனைவி கட்டிலில் தூங்கி கொண்டிருந்தார். இதை பார்த்த வாலிபர் கொள்ளையடிக்க வந்ததை மறந்து பெண் மீது சபலம் கொண்டார். அத்துடன் தான் கொண்டு வந்த கத்தரிக்கோலால் பெண்ணின் நைட்டியை வெட்டி எடுத்த அவர் சில்மிஷம் செய்தார்.

இதனால் பெண் திடீரென கண்விழித்தார். அப்போது அந்த வாலிபர், பெண்ணின் கழுத்தில் கிடந்த தாலி சங்கிலியை பறிக்க முயன்றார். உடனே பெண் திருடன்... திருடன்... என கத்தி கூச்சலிட்டார். உடனே அந்த வாலிபர் அங்கிருந்து தப்பி ஓடினார். இதற்கிடையே பெண்ணின் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அங்கு திரண்டனர். அவர்கள் தப்பியோடிய வாலிபரை துரத்தி சென்று பிடிக்க முயன்றனர். ஆனால், அவர் வேகமாக ஓடி தப்பி சென்றார்.

இதுகுறித்து பெண் குளச்சல் போலீஸ் நிலையத்துக்கு செல்போன் மூலம் தகவல் கொடுத்தார். உடனே, போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து அந்த பகுதியில் தேடினர். அப்போது குடியிருப்பு பகுதியில் பதுங்கி இருந்த வாலிபரை மடக்கி பிடித்தனர். தொடர்ந்து அந்த வாலிபரை போலீஸ் நிலையம் கொண்டு வந்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர் கீழமுட்டம் பகுதியை சேர்ந்த சகாயஜோஸ்(வயது24) என்பது தெரிய வந்தது. இவர் பெண்ணின் வீட்டில் கொள்ளையடிக்க வந்த இடத்தில் சில்மிஷம் செய்ததை ஒத்துக்கொண்டார். இதுகுறித்து அவர் போலீசாரிடம் கூறும்போது, நான் வேலைக்கு செல்லாமல் ஊர் சுற்றி வந்தேன். அத்துடன் குறுகிய காலத்தில் கோடீஸ்வரனாக ஆசைப்பட்டு திருட்டு தொழிலில் ஈடுபட்டேன்.

சம்பவத்தன்று பெண்ணின் வீட்டை நோட்ட மிட்ட போது வீட்டின் முன் ஆண்கள் அணியும் செருப்பு இல்லாததை கண்டேன். இதனால் வீட்டில் அவரது கணவர் இல்லை என்பதை உறுதி செய்து கொண்டு மாடி கதவின் பூட்டை கடப்பாறை கம்பியால் உடைத்து உள்ளே புகுந்து கொள்ளையடிக்க முயன்றேன். ஆனால், நகையோ, பணமோ கிடைக்கவில்லை.

ஆனால், பெண் தூங்கி கொண்டிருந்த அறையில் சென்ற போது சபல புத்தியால் சில்மிஷம் செய்தேன். அவர் கண் விழித்ததும் தப்பியோடி குடியிருப்பு பகுதியில் பதுங்கி இருந்தேன். ஆனால் போலீசார் என்னை தேடி கண்டுபிடித்தனர் இவ்வாறு அவர் கூறியதாக போலீசார் தெரிவித்தனர்.

இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சகாயஜோஸை கைது செய்தனர். தொடர்ந்து அவரை இரணியல் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். கைது செய்யப்பட்ட சகாயஜோஸ் மீது மணவாளக்குறிச்சி, வெள்ளிச்சந்தை போலீஸ் நிலையங்களில் 8 திருட்டு வழக்குகளும், குளச்சல் மகளிர் போலீஸ் நிலையத்தில் 2 போக்சோ வழக்குகளும் நிலுவையில் உள்ளன.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com