எலக்ட்ரிக்கல் கடை உரிமையாளர் வீட்டில் கத்திமுனையில் ரூ.4½ லட்சம் கொள்ளை

ராயக்கோட்டையில் எலக்ட்ரிக்கல் கடை உரிமையாளர் வீட்டில் கத்தி முனையில் ரூ.4 லட்சத்து 50 ஆயிரத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்கள் 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
எலக்ட்ரிக்கல் கடை உரிமையாளர் வீட்டில் கத்திமுனையில் ரூ.4½ லட்சம் கொள்ளை
Published on

ராயக்கோட்டை

ராயக்கோட்டையில் எலக்ட்ரிக்கல் கடை உரிமையாளர் வீட்டில் கத்தி முனையில் ரூ.4 லட்சத்து 50 ஆயிரத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்கள் 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

எலக்ட்ரிக்கல் கடை உரிமையாளர்

ராஜஸ்தான் மாநிலம் தாளி மாவட்டம் திப்பிலிகலா கிராமத்தைச் சேர்ந்தவர் ருக்காராம். இவரது மகன் கலுராம் (வயது 32). இவர் கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டையில் கெலமங்கலம் சாலையில் உள்ள தக்காளி மண்டி அருகே எலக்ட்ரிக்கல் மற்றும் ஹார்டுவேர் கடை நடத்தி வருகிறார்.

இவரது கடை தரைதளத்தில் அமைந்துள்ளது. 2-வது தளத்தில் கலுராம் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவருக்கு யசோதா என்ற மனைவியும், மீனா, கிருத்திகா என்ற 2 மகள்களும் உள்ளனர். கலுராம் கடைக்கு சென்று விட்டார். யசோதா மற்றும் குழந்தைகள் மட்டும் வீட்டில் இருந்தனர்.

ரூ.4.50 லட்சம் கொள்ளை

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு 2 பேர் கலுராம் வீட்டிற்குள் திடீரென்று நுழைந்தனர். இதை சற்றும் எதிர்பார்க்காத யசோதா கூச்சலிட முயன்றார். அதற்குள் அந்த நபர்கள் தாங்கள் வைத்திருந்த கத்தியை குழந்தைகள் கழுத்தில் வைத்து, வீட்டில் உள்ள பீரோ சாவியை கொடுக்குமாறும் இல்லாவிட்டால் அனைவரையும் கொன்று விடுவேன் எனவும் மிரட்டினர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த யசோதா பீரோ சாவியை எடுத்து அந்த நபர்களிடம் கொடுத்தார். பின்னர் கொள்ளையர்கள் 2 பேரும் பீரோவை திறந்து உள்ளே இருந்த ரூ.4 லட்சத்து 50 ஆயிரத்தை கொள்ளையடித்து கொண்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டனர். இந்த சம்பவம் குறித்து யசோதா கலுராமுக்கு தகவல் தெரிவித்தார்.

போலீசார் விசாரணை

இதனால் அவர் பதறியடித்து கொண்டு வீட்டுக்கு வந்தார். பின்னர் இது குறித்து அவர் ராயக்கோட்டை போலீசுக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். அதில் கிடைத்த தகவல்கள் வருமாறு:-

கொள்ளையர்கள் 2 பேருக்கும் சுமார் 25 வயது இருக்கும். அதில் ஒருவன் சிவப்பு நிற சட்டையும், கருப்பு நிற பேண்டும், கருப்பு மற்றும் வெள்ளை நிறம் கலந்த ஷூ அணிந்திருந்தார். மற்றொரு நபர் கருப்பு நிற மப்ளரும், சுவெட்டரும் அணிந்து இருந்தார்.

மாற்றுத்திறனாளி

அந்த மர்ம நபர்கள் 2 பேரும் கத்தி முனையில் யசேதா மற்றும் குழந்தைகளை மிரட்டி பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர். கொள்ளையர்களில் 2 பேரில் ஒருவர் மட்டும் கால் ஊனமுற்ற, மாற்றுத்திறனாளி என போலீசாரின் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இதையடுத்து கைரேகை நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டனர். அவர்கள் கொள்ளை நடந்த வீட்டில் பதிவாகி இருந்த கைரேகைகளை பதிவு செய்து கொண்டனர். கலுராம் எலக்ட்ரிக்கல் கடையில் கீழே இருப்பதையும், அவரது குடும்பத்தினர் மேல் மாடியில் வீட்டில் இருப்பதையும், அங்கு பணம் இருப்பதையும் நன்றாக அறிந்த 2 பேர் தான் இந்த செயலை செய்திருப்பார்கள் என போலீசார் சந்தேகிக்கிறார்கள்.

பரபரப்பு

இந்த துணிகர கொள்ளை சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்கள் 2 பேரையும் வலைவீசி தேடி வருகிறார்கள். ராயக்கோட்டையில் எலக்ட்ரிக்கல் கடை உரிமையாளர் வீட்டில் கத்தி முனையில் ரூ.4 லட்சத்து 50 ஆயிரம் கொள்ளையடித்து சென்ற துணிகர சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com