நகைக்கடையில் கொள்ளை; தடுக்க முயன்ற ஊழியர்கள் மீது துப்பாக்கி சூடு - தெலுங்கானாவில் பரபரப்பு

கொள்ளையர்களை தடுக்க முயன்ற ஊழியர்கள் 4 பேருக்கு படுகாயம் ஏற்பட்டது.
நகைக்கடையில் கொள்ளை; தடுக்க முயன்ற ஊழியர்கள் மீது துப்பாக்கி சூடு - தெலுங்கானாவில் பரபரப்பு
Published on

ஐதராபாத்,

தெலுங்கானா மாநிலம் கரீம்நகர் பகுதியில் உள்ள நகைக்கடையில், இன்று காலை ஊழியர்கள் வழக்கம்போல் பணியில் ஈடுபட்டு வந்தனர். அப்போது வாடிக்கையாளர் போல் கடைக்கு வந்த மர்ம நபர் ஒருவர், தனக்கு 20 கிராம் தங்க செயின் வேண்டும் என்று கேட்டுள்ளார்.

அந்த சமயத்தில் கடையில் வேறு வாடிக்கையாளர்கள் யாரும் இல்லாத நிலையில், மேலும் 2 நபர்கள் கடைக்குள் நுழைந்து தங்களுக்கும் நகைகள் வேண்டும் என கேட்டுள்ளனர். அவர்கள் கேட்ட நகைகளை கடை ஊழியர்கள் எடுத்துக் காண்பித்துக் கொண்டிருந்த சமயத்தில், மேலும் 2 நபர்கள் கடைக்குள் நுழைந்துள்ளனர்.

அப்போது தீடீரென அவர்கள் 5 பேரும் சேர்ந்துகொண்டு, தங்களிடம் இருந்த துப்பாக்கிகளை எடுத்து ஊழியர்களை முழங்காலிடச் சொல்லி மிரட்டியுள்ளனர். பின்னர் கடையில் இருந்த நகைகளை அவர்கள் கொள்ளையடித்த நிலையில், ஊழியர்கள் அந்த கொள்ளை கும்பலை தடுக்க முயற்சி செய்தனர்.

அப்போது அந்த கொள்ளைக்காரர்கள் ஊழியர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்திவிட்டு, தாங்கள் கொள்ளையடித்த நகைகளுடன் அங்கிருந்து தப்பிச் சென்றனர். இந்த சம்பவத்தில் 4 ஊழியர்களுக்கு படுகாயம் ஏற்பட்ட நிலையில், அவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து, சி.சி.டி.வி. காட்சிகளின் அடிப்படையில் கொள்ளையர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com