ரோபோ சங்கர் மறைவு: அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல்

ரோபோ சங்கர் நடிப்புத் திறமையால் படிப்படியாக முன்னேறினார் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
ரோபோ சங்கர் மறைவு: அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல்
Published on

சென்னை,

உடல்நலக்குறைவால் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர் சிகிச்சை பலனின்றி இன்று இரவு உயிரிழந்தார். அவரது மறைவுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,

பிரபல திரைப்பட நகைச்சுவை நடிகரும், கழக நட்சத்திரப் பேச்சாளருமான ரோபோ சங்கர், உடல்நலக்குறைவால் காலமானார் என்ற செய்தி அறிந்து மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன். சிறு சிறு விழா மேடைகளில் தொடங்கி, தொலைக்காட்சி, வெள்ளித்திரை என தனது தனித்துவ நடிப்புத் திறமையால் படிப்படியாக முன்னேறி வந்து, தனது இயல்பான நகைச்சுவை உணர்வால் ரசிகர்களை ஈர்த்த அன்புச் சகோதரர் ரோபோ சங்கரின் இழப்பு என்பது ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும்.

அவரை இழந்து வாடும் அவர்தம் குடும்பத்தாருக்கும், திரைத்துறையைச் சார்ந்தோருக்கும், ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்வதுடன், மறைந்த அவர்தம் ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,

சின்னத்திரை முதல் வெள்ளித்திரை வரை பிரபலமாக விளங்கிய திரைப்படக் கலைஞர் ரோபோ சங்கரின் மறைவு மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. திரைப்படத்துறையினருக்கும், அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கிறேன். மேலும், திரைப்படக் கலைஞர்கள் தங்கள் கடுமையான பணிகளுக்கிடையில் உடல் நலத்தையும் பேணிப் பாதுகாக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,

தனது நகைச்சுவைத் திறனால், தமிழக மக்கள் அனைவரின் உள்ளங்களிலும் இடம்பிடித்த திரைக் கலைஞர், ரோபோ சங்கர் அவர்களது இறப்புச் செய்தி மிகுந்த அதிர்ச்சியும் வருத்தமும் அளிக்கிறது. ரோபோ சங்கர் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டிக் கொள்கிறேன். ஓம் சாந்தி! என்று தெரிவித்துள்ளார்.

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,

தமிழ்த் திரைப்பட நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர் உடல்நலக்குறைவால் இயற்கை எய்தினார் என்ற செய்தி மிகுந்த வேதனையையும், வருத்தத்தையும் அளிக்கிறது. தமிழ்த் திரையுலகில் தனித்துவமிக்க நடிகராகத் திகழ்ந்த ரோபோ சங்கரை இழந்துவாடும் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் சக திரைக்கலைஞர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்வதோடு அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம்வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,

திரைப்படங்கள் மற்றும் சின்னத்திரையில் நகைச்சுவைக் கலைஞராகவும், குணச்சித்திர நடிகராகவும் நடித்து அனைத்துத் தரப்பினராலும் ரசிக்கப்பட்ட ரோபோ சங்கர் உடல்நலக் குறைவால் காலமானார் என்ற செய்தியறிந்து வேதனை அடைந்தேன்.

சின்னத்திரை நிகழ்ச்சிகளில் ரோபோ சங்கர் பங்கேற்கத் தொடங்கிய நாளில் இருந்தே அவரது நிகழ்ச்சிகளை தொடர்ந்து கண்டு ரசித்து வந்திருக்கிறேன். மன அழுத்தத்தாலும், சோதனைகளாலும் இறுக்கமாக இருந்த காலங்களில் என்னை அவரது நகைச்சுவைகளின் மூலம் கவலைகளை மறந்து சிரிக்க வைத்தவர் சங்கர்.

திரைத்துறையில் ஏராளமான சாதனைகளை படைத்திருக்க வேண்டிய ரோபோ சங்கர் இளம் வயதில் நம்மை விட்டு பிரிந்திருப்பதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அவரை இழந்து வாடும் குடும்பத்தினர், நண்பர்கள், திரைத்துறையினர் உள்ளிட்ட அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள செய்தியில்,

சின்னத் திரையில் அறிமுகமாகி வெள்ளித்திரையில் கொடிகட்டிப் பறந்த அன்புச் சகோதரர் பலகுரல் மன்னன் ரோபோ சங்கர் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி காலமானார் என்ற செய்தி அறிந்து ஆற்றொணாத் துயரமும், மிகுந்த மன வேதனையும் அடைந்தேன்.

அன்புச் சகோதரர் ரோபோ சங்கர் தனக்குள்ள தனித் திறமையாலும், கடின உழைப்பாலும் முன்னுக்கு வந்தவர். தனது நகைச்சுவை மூலம் மக்களை கவர்ந்த பெருமைக்குரியவர் திரு. ரோபோ சங்கர். எல்லோரிடத்திலும் அன்பாகவும், பண்பாகவும் பழகக்கூடியவர் என்பதோடு மட்டுமல்லாமல் அனைவருக்கும் உதவக்கூடிய மனோபாவம் படைத்தவர் ரோபோ சங்கர். இவருடைய இழப்பு திரைப்படத் துறையினருக்கு பேரிழப்பு.

ரோபோ சங்கரை இழந்து வாடும் அவர்தம் குடும்பத்தினருக்கும், திரைப்படத் துறையினருக்கும், அவரது ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தினையும் தெரிவித்துக் கொள்கின்றேன். அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம்வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,

தமிழ் திரையுலகில் தனித்துவமான நடிப்பாலும், மக்களின் இதயங்களில் புன்னகையை விதைத்ததாலும், ஒரு தலைமுறைக்கே அடையாளமாக விளங்கிய நடிகர் ரோபோ சங்கரின் திடீர் மறைவு மிகுந்த வேதனையில் ஆழ்த்தியுள்ளது.

ஒரு கலைஞன் தனது கலை மூலம் மக்களிடையே நிலைத்து நிற்பதற்கே மிகப்பெரிய அர்த்தம் உண்டு. அந்த அர்த்தத்தை உண்மையாக்கியவர் தான் ரோபோ சங்கர். அவர் நடித்த ஒவ்வொரு கதாபாத்திரமும், சொன்ன ஒவ்வொரு வசனமும், வெளிப்படுத்திய ஒவ்வொரு புன்னகையும் - மக்கள் மனங்களில் வாழ்ந்து கொண்டே இருக்கும்.

மக்களின் மனதைக் கவர்ந்து, மகிழ்ச்சியையும் சிரிப்பையும் பரப்பியவர் இன்று இல்லாதிருப்பது, கலை உலகிற்கு மட்டுமல்லாது, மக்களின் வாழ்வின் பல்வேறு தளங்களுக்கு இழப்பாகும். மக்களின் வாழ்வியலில் கலைஞர்கள் ஏற்படுத்தும் தாக்கத்தை நாம் எப்போதும் மதித்தும் காத்தும் வந்துள்ளது. அந்த வரிசையில், ரோபோ சங்கர் தன் கலைப்பணியால் தமிழக மக்களின் அன்பையும் மரியாதையையும் பெற்றது குறிப்பிடத்தக்கது.

அவரது மறைவு, சிரிப்பின் அருமையை நமக்கு உணர்த்திய ஒரு கலையுலகப் பங்களிப்பு இன்று நிறுத்தப்பட்டதுபோல் உள்ளது. ஆனாலும் அவர் விதைத்த புன்னகைகள் தலைமுறைகளுக்கு சின்னமாகவே தொடரும். அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன். அவருடைய குடும்பத்தினர் இந்த மிகப்பெரிய துயரைத் தாங்க வலிமை பெற வேண்டும் என மனமாரக் கோருகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,

நண்பர் ரோபோ சங்கரின் மறைவு மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. என்மீதும் இயக்கத்தின் மீதும் பேரன்பு கொண்டிருந்தவர். கலை உலகில் சாதனைகள் படைத்து பொதுமக்களின் நல்லன்பை வென்றெடுத்தவர். அவரது மறைவு ஈடுசெய்ய இயலாத பேரிழப்பாகும். அவரது பிரிவால் பெருந்துயரில் உழலும. குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com