மகேந்திரகிரியில் ராக்கெட் கிரையோஜெனிக் என்ஜினை 200 வினாடிகள் இயக்கி சாதனை

நெல்லை மாவட்டம் மகேந்திரகிரியில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோவின் உந்துவிசை வளாகம் உள்ளது.
மகேந்திரகிரியில் ராக்கெட் கிரையோஜெனிக் என்ஜினை 200 வினாடிகள் இயக்கி சாதனை
Published on: 

நெல்லை,

மகேந்திரகிரி இஸ்ரோ மையத்தில் ஜி.எஸ்.எல்.வி.-எப்.19 ராக்கெட்டுக்கான கிரையோஜெனிக் என்ஜினை 200 வினாடிகள் வெற்றிகரமாக இயக்கி சாதனை நிகழ்த்தப்பட்டது.

கிரையோஜெனிக் என்ஜின்

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ தனது அடுத்தகட்ட விண்வெளி திட்டத்தில் மேலும் ஒரு முக்கிய மைல்கல்லை எட்டியுள்ளது. அதாவது, நெல்லை மாவட்டம் மகேந்திரகிரியில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோவின் உந்துவிசை வளாகம் உள்ளது. இங்கு ஜி.எஸ்.எல்.வி.-எப்.19 ராக்கெட்டில் பயன்படுத்தப்பட உள்ள கிரையோஜெனிக் என்ஜினுக்கான இறுதிக்கட்ட விமான தகுதிச்சோதனை நடத்தப்பட்டது.

கிரையோஜெனிக் என்ஜின் தொடர்ந்து 200 வினாடிகள் வெற்றிகரமாக இயக்கப்பட்டு அதன் செயல்திறன் பரிசோதிக்கப்பட்டு சாதனை நிகழ்த்தப்பட்டது. சோதனையின்போது, என்ஜினின் முக்கிய பகுதிகளான பிரதான என்ஜின், வாயு உருவாக்கி ஆகியவை வெற்றிகரமாக பற்ற வைக்கப்பட்டன. மேலும், என்ஜின் சீரான இயக்க நிலையில் இருந்தபோது அதன் செயல்பாடுகள் இயல்பாகவும், தொடர்ச்சியாகவும் இருந்தது உறுதி செய்யப்பட்டது.

அடுத்த தலைமுறை செயற்கைக்கோள்

சோதனைக்கு முன்பாக கணிக்கப்பட்ட தொழில்நுட்ப முடிவுகளுக்கு ஏற்ப அனைத்து செயல்பாடுகளும் திருப்திகரமாக அமைந்தது. இந்த வெற்றிகரமான சோதனையைத் தொடர்ந்து, பரிசோதிக்கப்பட்ட கிரையோஜெனிக் என்ஜின் ஜி.எஸ்.எல்.வி.-எப். 19 ராக்கெட்டின் கிரையோஜெனிக் நிலையில் பொருத்தப்பட உள்ளது.

இந்த ராக்கெட் மூலம் இந்தியாவின் அடுத்த தலைமுறை வழி காட்டுதல் மற்றும் வழிசெலுத்தல் செயற்கைக்கோளான என்.வி.எஸ்.-4 விண்ணில் செலுத்த திட்டமிடப்பட்டு உள்ளது என்று இஸ்ரோ வட்டாரம் தெரிவித்தது.

X