

திருவள்ளூர்,
ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ராக்கெட் ஏவப்பட உள்ளதை முன்னிட்டு, பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருவள்ளூர் மாவட்ட மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து இன்று இரவு 11.51 மணிக்கு ஜிஎஸ்எல்வி (GSLV) ராக்கெட் விண்ணில் செலுத்தப்பட உள்ளது.
ராக்கெட் ஏவப்படும் போது ஏதேனும் அசம்பாவிதங்கள் ஏற்படுவதை தவிர்க்கும் பொருட்டு, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை அதிகாரிகள் அதிகாரபூர்வமாக அறிவுறுத்தியுள்ளனர்.
அதன்படி, இன்று மாலை 4 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரை மீனவர்கள் யாரும் கடலுக்குள் மீன்பிடிக்க செல்லக்கூடாது என மாவட்ட நிர்வாகம் மற்றும் மீன்வளத்துறை சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவை மீறி யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் என கடலோர பகுதி கிராம மக்களுக்கு தீவிரமாக அறிவுறுத்தப்பட்டு வருகிறது.