‘அடுத்த ஆண்டு முதல் குலசேகரன்பட்டினத்தில் இருந்து ராக்கெட்டுகள் ஏவப்படும்’ - இஸ்ரோ தலைவர் தகவல்

குலசேகரன்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைக்க தமிழக அரசு சுமார் 2,233 ஏக்கர் பரப்பளவு இடத்தை ஒதுக்கி உள்ளது.
‘அடுத்த ஆண்டு முதல் குலசேகரன்பட்டினத்தில் இருந்து ராக்கெட்டுகள் ஏவப்படும்’ - இஸ்ரோ தலைவர் தகவல்
Published on: 

சென்னை,

இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின்(இஸ்ரோ) ராக்கெட்டுகள் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டா சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் உள்ள 2 ஏவுதளங்களில் இருந்து மட்டுமே தற்போது விண்ணில் ஏவப்பட்டு வருகின்றன. அதிக எடையை தாங்கி செல்லும் ராக்கெட்டுகளை ஏவுவதற்காக 3-வது ஏவுதளம் ஸ்ரீஹரிகோட்டாவில் அமைக்கப்பட்டு வருகிறது.

ராக்கெட் ஏவுதளம்

இந்த நிலையில், தமிழ்நாட்டில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள குலசேகரன்பட்டினத்தில் 2-வது ராக்கெட் ஏவுதளம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதற்காக சுமார் 2 ஆயிரத்து 233 ஏக்கர் பரப்பளவு இடத்தை தமிழக அரசு ஒதுக்கி உள்ளது. குலசேகரபட்டினம் ராக்கெட் ஏவுதளத்திற்கான பணிகளை பிரதமர் மோடி கடந்த 2024-ம் ஆண்டு பிப்ரவரியில் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். இது இந்திய விண்வெளி உள்கட்டமைப்பில் ஒரு புதிய அத்தியாயத்தைக் குறிக்கிறது.

யூரி கேகரின் சிலை

இந்த நிலையில், இந்தியாவின் 2-வது விண்வெளி ஏவுதளமான குலசேகரன்பட்டினத்தில் அடுத்த ஆண்டு முதல் ராக்கெட் ஏவும் பணிகள் தொடங்கும் என இஸ்ரோ தலைவர் வி.நாராயணன் தெரிவித்துள்ளார். முன்னதாக சென்னையில் உள்ள பெரியார் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையத்தில் அமைக்கப்பட்டுள்ள ரஷிய விண்வெளி வீரர் யூரி கேகரின் சிலையை திறந்து வைக்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் இஸ்ரோ தலைவர் வி.நாராயணன், ரஷிய தூதர் ஜெனரல் வலேரி கோத்சேவ் உள்ளிட்டோர் பங்கேற்று சிலையை திறந்து வைத்தனர். இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு நடந்த செய்தியாளர் சந்திப்பில் வி.நாராயணன் கூறியதாவது;-

ரஷியாவின் ஒத்துழைப்பு

“இந்தியாவின் விண்வெளி ஆய்வுகளுக்கு, குறிப்பாக மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் ‘ககன்யான்’ திட்டத்திற்கு ரஷியா மிகப்பெரிய ஒத்துழைப்பை வழங்கி வருகிறது. இதற்காக ரஷியாவிற்கு நாங்கள் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.

அடுத்த ஆண்டு முதல்...

குலசேகரன்பட்டினத்தில் அமைக்கப்பட்டு வரும் ராக்கெட் ஏவுதளத்தின் கட்டுமானப் பணிகள் வேகமாக நடந்து வருகின்றன. அடுத்த ஆண்டு முதல் அங்கிருந்து ராக்கெட்டுகள் விண்ணில் ஏவப்படும்.

சமீபத்தில் இஸ்ரோ விண்ணில் ஏவிய என்.வி.எஸ். செயற்கைக்கோள் அதன் சுற்றுவட்டப்பாதையில் நேர்த்தியாக நிலைநிறுத்தப்பட்டு உள்ளது. அதில் சிறிய சோதனைகள் மேற்கொள்ளப்பட்ட பிறகு செயற்கைக்கோள் முழுமையான அளவில் செயல்பாட்டுக்கு வரும்.”

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

X