திருவண்ணாமலையில் சரிந்த பாறைகள்... வீடுகள் சேதம்; மீட்பு பணிகள் தீவிரம்

திருவண்ணாமலையில் விடிய, விடிய பெய்த கனமழை காரணமாக பாறைகள் உருண்டு விழுந்ததில் வீடுகள் சேதமடைந்தது.
திருவண்ணாமலையில் சரிந்த பாறைகள்... வீடுகள் சேதம்; மீட்பு பணிகள் தீவிரம்
Published on

திருவண்ணாமலை,

திருவண்ணாமலை மாவட்டத்தில் பெஞ்சல் புயல் காரணமாக நேற்று முன்தினம் காலை முதல் கனமழை பெய்தது. தொடர்ந்து இடைவிடாமல் விடிய, விடிய பெய்த மழை நேற்றும் தொடர்ந்தது. பகல் வேளையில் மழையின் வேகம் அதிகரித்து காணப்பட்டது.

இந்நிலையில் திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் திருக்கோவிலுக்கு பின்புறம் அமைந்துள்ள மலை உச்சியில் சுமார் 100 அடி உயரத்தில் இருந்து பாறை ஒன்று உருண்டு வந்தது.

சற்றும் எதிர்பாராமல் வேகமாக உருண்டு வந்த பாறை, வ உ சி நகர் தெருவில் வீடுகளின் மீது விழுந்தது. இதில் இரு வீடுகளில் இருந்த 7 பேர் சிக்கி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. தகவலறிந்து விரைந்து வந்த தீயணைப்பு மற்றும் மீட்பு குழுவினர் மீட்புப் பணியில் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில் திருவண்ணாமலையில் பாறைகள் உருண்டு விழுந்ததில் 3 வீடுகள் முற்றிலும் சேதமடைந்துள்ளதாக கூறப்படுகிறது. தற்போது சம்பவ இடத்தில் தேசிய பேரிடர் மீட்புப் படை மீட்புப் பணியை தொடங்கி உள்ளது. வீட்டின் மீது விழுந்த பாறைகளை அகற்றும் பணியில் மீட்புப் படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

இடிந்த வீடுகளில் உள்ளே எத்தனை பேர் சிக்கியுள்ளனர் என்பது குறித்து முழு விவரங்கள் பாறையை அகற்றிய பிறகு தான் முழுமையான விவரம் தெரியவரும் என்று கூறப்படுகிறது

முன்னதாக திருவண்ணாமலையில் பாறை சரிந்து விழுந்த பகுதியில் மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் மற்றும் எஸ்.பி சுதாகர் ஆகியோரும் சம்பவ இடத்துக்கு விரைவாகச் சென்று மீட்புப் பணிகளைத் துரிதப்படுத்தினார்கள்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com