காதல் திருமணம்:தாலியை கழற்றி எறிந்து மகளை அழைத்து சென்ற பெற்றோர் ; காதலன் தற்கொலை

நாகை அருகே தாலி கட்டிய பிறகு காதலியை காவல் நிலையத்தில் வைத்து பிரித்ததால் காதலன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
காதல் திருமணம்:தாலியை கழற்றி எறிந்து மகளை அழைத்து சென்ற பெற்றோர் ; காதலன் தற்கொலை
Published on

நாகப்பட்டினம்:

நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி சிவன் கீழவீதி பகுதியை சேர்ந்த அரவிந்த்குமார் (26). அதே பகுதியை சேர்ந்த சிவநந்தினி (22) இவர்கள் இருவரும் கடந்த மூன்று வருடங்களுக்கு மேலாக காதலித்து வந்துள்ளனர்.

இவர்கள் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்த போது பெண் வீட்டில் எதிர்ப்பு கிளம்பியது. இதனால் அரவிந்த் குமார் மற்றும் சிவ நந்தினி ஆகியோர் வெளியூருக்குச் சென்று கோவிலில் தாலிக்கட்டி திருமணம் செய்து கொண்டனர்.

இந்த நிலையில் மகள் சிவ நந்தினியை காணவில்லை என கடந்த 11ஆம் தேதி வேளாங்கண்ணி காவல் நிலையத்தில் பெண் வீட்டார் புகார் ஒன்றை அளித்துள்ளனர். அதனைத் தொடர்ந்து திருமணமான அரவிந்த்குமார் மற்றும் சிவநந்தினி ஆகியோர் நேற்று 19 ஆம் தேதி வேளாங்கண்ணி காவல் நிலையம் வந்துள்ளனர்.

அப்போது காவல் நிலையத்தில் நடைபெற்ற பேச்சு வார்த்தையில், அரவிந்த்குமார் அவரது தாயார் விஜயலட்சுமி ஆகியோரை, பெண் வீட்டாரான சிவ நந்தினியின் தந்தை ராஜேந்திரன், அவருடைய அண்ணன் தம்பிகள் மற்றும் உறவினர் ஆகியோர் மிரட்டி, தாலியை கழற்றி காவல் நிலைய வாசலில் வீசியதாக கூறப்படுகிறது.

மேலும், சிவநந்தினியை மிரட்டி வீட்டிற்கு அழைத்து சென்ற உறவினர்கள் அரவிந்த்குமாரை அவமானப்படுத்தி பேசி கொலைமிரட்டல் விடுத்து சென்றதாகவும் சொல்லப்படுகிறது. இந்த நிலையில் காதலி பிரிந்த சோகத்தில் இருந்த அரவிந்த்குமார் தனது வீட்டில் அழுது கொண்டே இருந்ததார். அவர் இன்று அதிகாலை தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

அதனை தொடர்ந்து அரவிந்த் குமாரின் தாய் விஜயலக்ஷ்மி வேளாங்கண்ணி காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில், அரவிந்த்குமார் உடலை கைப்பற்றிய வேளாங்கண்ணி போலீசார் வழக்கு பதிவு செய்து சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதனிடையே சிவனந்தினி கழுத்தில் கட்டப்பட்ட தாலி வேளாங்கண்ணி காவல் நிலைய வாசலில் வீசிய எறியப்பட்டு கிடக்கும் காட்சிகள், அரவிந்த்குமார் மற்றும் சிவநந்தினி ஆகியோர், தாலிக்கட்டி கோவிலில் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள், இரத்தத்தால் எழுதப்பட்ட காதல் கடிதங்கள் ஆகியவைகள் வெளியாகி வேளாங்கண்ணி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com