'சிங்கார சென்னை 2.0' திட்டத்துக்கு வலு சேர்க்கும் வகையில் மெரினா கடற்கரையில் 'ரோப் கார்' வசதி - பெருநகர சென்னை மாநகராட்சி ஆலோசனை

'சிங்கார சென்னை' திட்டத்துக்கு வலு சேர்க்கும் வகையில் மெரினா கடற்கரையில் 'ரோப் கார்' வசதி ஏற்படுத்த பெருநகர சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.
'சிங்கார சென்னை 2.0' திட்டத்துக்கு வலு சேர்க்கும் வகையில் மெரினா கடற்கரையில் 'ரோப் கார்' வசதி - பெருநகர சென்னை மாநகராட்சி ஆலோசனை
Published on

'சிங்கார சென்னை' திட்டத்தின் கீழ் தலைநகரை அழகுப்படுத்துவதற்கு புதுப்புது யோசனைகளை கவுன்சிலர்கள் தெரிவிக்க வேண்டும் என்று நகர்ப்புற நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு கேட்டுக்கொண்டார். இதையடுத்து கவுன்சிலர்கள் தங்கள் சிந்தனையில் உதித்த யோசனைகளை முன்மொழியத் தொடங்கினார்கள்.

அந்த வகையில், எழில் கொஞ்சும் மெரினா கடற்கரையை ஆகாயத்தில் சென்றவாறே பார்த்து ரசிக்கும் வகையில் 'ரோப் கார்' வசதி ஏற்படுத்துவதற்கு திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. பல்வேறு துறைகளை சேர்ந்த அதிகாரிகளுடன் பெருநகர சென்னை மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் என்ஜினீயர்கள் ஆலோசனை நடத்தி எவ்வாறு திட்டத்தை செயல்படுத்தலாம் என்று வியூகம் வகுத்து வருகின்றனர்.

முதல் கட்டமாக நேப்பியர் பாலத்தில் இருந்து 'நம்ம சென்னை' செல்பி முனை வரையிலான 3 கி.மீ. தூரத்துக்கு 'ரோப் கார்' வசதி கொண்டு வருவதற்கு உத்தேசிக்கப்பட்டு இருக்கிறது. இதேபோல நேப்பியர் பாலத்தில் இருந்து ராயபுரம் ரெயில் நிலையம் வரையிலும் 'ரோப் கார்' வசதி ஏற்படுத்த முன்மொழியப்பட்டுள்ளது.

மெரினா கடற்கரையை தொடர்ந்து, அடையாறு ஆற்றை ஒட்டிச் செல்லும் வகையிலும், பாரம்பரிய கட்டிடங்களை ஒட்டிச் செல்லும் வகையிலும் 'ரோப் கார்' வசதி ஏற்படுத்துவது தொடர்பான சாத்தியக்கூறுகள் அடங்கிய விரிவான திட்ட அறிக்கையை தயாரிக்கும் பணியில் பெருநகர சென்னை மாநகராட்சி முழுவீச்சில் ஈடுபட்டுள்ளது.

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் 'சிங்கார சென்னை 2.0' திட்டத்துக்கு வலு சேர்க்கும் வகையிலான புதிய திட்டங்கள் தொடர்பான முன்மொழிவுகளுக்கு தமிழக அரசு விரைவில் நிர்வாக அனுமதி வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்தவகையில், பெருநகர சென்னை மாநகராட்சி தீட்டிய திட்டங்களுக்கு, மாநில அரசு இறுதி வடிவம் விரைவில் கொடுக்கும் என்று கருதப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com