ஊட்டியில் ரோஜா கண்காட்சி மேலும் 2 நாட்கள் நீட்டிப்பு

ஊட்டி ரோஜா பூங்காவில், ரோஜா அலங்காரங்களை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர்.
ஊட்டியில் ரோஜா கண்காட்சி மேலும் 2 நாட்கள் நீட்டிப்பு
Published on

ஊட்டி,

நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் ஏப்ரல், மே மாதங்களில் கோடை சீசன் நடைபெறுகிறது. இதையொட்டி சுற்றுலா பயணிகளை மகிழ்விக்க மாவட்ட நிர்வாகம் சார்பில் கோடை விழா, கண்காட்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. கோடை விழாவின் 3-வது நிகழ்ச்சியாக ஊட்டி அரசு ரோஜா பூங்காவில் 20-வது ரோஜா கண்காட்சி கடந்த 10-ந் தேதி தொடங்கியது.

இந்த கண்காட்சியில் 2 லட்சம் ரோஜா மலர்களை கொண்டு கடல்வாழ் உயிரினங்களை பாதுகாப்பது குறித்த அலங்காரங்கள் தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டு உள்ளது. குறிப்பாக 80 ஆயிரம் மலர்களை கொண்டு இரட்டை டால்பின், சிப்பிக்குள் முத்து, கடற்குதிரை, பென்குயின்கள், ஆமை, வண்ண மீன், நீலத்திமிங்கலம், பப்பர் பிஷ் போன்ற அலங்காரங்கள் இடம்பெற்று உள்ளன. இது சுற்றுலா பயணிகளின் கண்களுக்கு விருந்து படைக்கிறது.

இது மட்டுமன்றி ரோஜா பூங்காவில் 4,200 ரகங்களை சேர்ந்த 40 ஆயிரம் செடிகளில் பூத்துக் குலுங்கும் பல வண்ண ரோஜாக்களை சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்து உள்ளது. கண்காட்சியையொட்டி ரோஜா பூங்காவில் குவிந்த சுற்றுலா பயணிகள், ரோஜா அலங்காரங்கள் முன்பு நின்று செல்பி, புகைப்படம் எடுத்து மகிழ்ச்சியடைந்தனர். ரோஜா கண்காட்சியின் நிறைவு நாளான நேற்று மழையை பொருட்படுத்தாமல் ஏராளமான சுற்றுலா பயணிகள் ரோஜா பூங்காவுக்கு வந்திருந்தனர். அவர்கள் ரோஜா அலங்காரங்களை கண்டு ரசித்தனர். நேற்று மாலையுடன் ரோஜா கண்காட்சி நிறைவடைந்தது.

நிறைவு விழாவில் கண்காட்சியில் சிறப்பாக அலங்காரம் செய்திருந்த போட்டியாளர்களுக்கு பரிசு கோப்பைகள் வழங்கப்பட்டது. சுற்றுலா பயணிகளின் வருகை காரணமாக, ரோஜா கண்காட்சி மேலும் 2 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டு உள்ளதாக தோட்டக்கலைத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 3 நாட்களில் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கண்டு ரசித்த நிலையில், சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரிப்பால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com