

சென்னை,
சென்னை ராயப்பேட்டை பகுதியில் சாலையில் நடந்து சென்ற பெண்ணை கீழே தள்ளி பாலியல் தொல்லை கொடுத்த ரவுடியை போலீசார் கைது செய்தனர்.
சென்னை ராயப்பேட்டை, பீட்டர்ஸ் சாலை மேம்பாலத்திற்குக் கீழே நேற்று முன்தினம் மாலையில் பெண் ஒருவர் தனியாக நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அதே சாலையில் அந்த பெண்ணை பின்தொடர்ந்து சென்று போதை ஆசாமி ஒருவர், தகராறில் ஈடுபட்டுள்ளார். அந்த பெண் சத்தம்போடவே, அந்த பெண்ணின் கழுத்தைப் பிடித்து கீழே தள்ளி கொலை மிரட்டலிலும் ஈடுபட்டுள்ளார். அந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகவும் தெரிகிறது.
இதுதொடர்பாக அந்த பெண் கொடுத்த புகாரின்பேரில் அண்ணாசாலை போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி, பெண்கள் வன்கொடுமை சட்டப்பிரிவின் கீழ், வழக்குப்பதிவு செய்து விசாரித்தார். இதையடுத்து பெண்ணை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த சென்னை மயிலாப்பூர், அம்பேத்கர் பாலம் பகுதியை சேர்ந்த சதீஷ் (வயது 36) கைது செய்யப்பட்டார். ரவுடியான அவர், நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டார்.